Published : 26 Jul 2014 09:47 AM
Last Updated : 26 Jul 2014 09:47 AM
முதல்வரை அவதூறாகப் பேசியது தொடர்பாக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு ஆக. 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தஞ்சை ஆபிரஹாம் பண்டிதர் சாலையில் தேமுதிக சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது அவர், முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாகப் பேசியதாக வழக்குத் தொரடப்பட்டது.
இதேபோல, கும்பகோணம் அருகேயுள்ள கபிஸ்தலத்தில், விருகம்பாக்கம் தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் அண்டக்குடி ஜெயக்குமார் ஆகியோரும், முதல்வரை அவதூறாகப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்டது.
தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்குகளின் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேமுதிக-வினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அளித்த மனுவில், விஜயகாந்த் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது என்றும், சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதால் எம்எல்ஏ பார்த்தசாரதி நேரில் ஆஜராக முடியவில்லை என்றும், உடல்நிலை சரியில்லாததால் ஜெயக்குமார் ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஆக. 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT