Published : 06 Apr 2023 06:07 AM
Last Updated : 06 Apr 2023 06:07 AM
தேனி: முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வழிநெடுகிலும் 24 மணி நேரமும் திருடப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு 50 சதவீத தண்ணீரே வந்து சேருகிறது.
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பிரதான குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக விளங்குகிறது.
தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இன்றி விநாடிக்கு 204 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், சில நாட்களாக 100 கன அடியாக குறைந்துள்ளது. தற்போதைய நீர்மட்டம் 116.40 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உள்ளது. ஆகவே, நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டு, குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 100 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
இருப்பினும், வைகை அணைக்கு 50 கன அடி நீரே வந்து சேர்கிறது. நீர் ஆவியாதல், ஆற்றின் சுடுமணல் பரப்பில் ஈர்க்கப்படும் நீர், தண்ணீர் திருட்டு போன்றவற்றால் இந்நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, ஆற்றின் வழித்தடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் திருட்டு பகிரங்கமாகவே நடக்கிறது. இதற்காக நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய பிளாஸ்டிக் குழாய்களை ஆற்று நீரில் இணைத்து, மோட்டார் மூலம் கரைப் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
24 மணி நேரமும் உறிஞ்சப்படும் இந்த நீர், ராட்சத கிணறுகளில் சேமித்து வைக்கப்படுகிறது. குறிப்பாக கம்பம், சின்னமனூர், வீரபாண்டி, அரண்மனைப்புதூர், குன்னூர் உள்ளிட்ட பல பகுதிகளின் இரு கரைகளிலும் இந்நிலை அதிகம் உள்ளது. ஏற்கெனவே, மூல வைகை வறண்ட நிலையில் தற்போது வைகை அணையின் ஒரே நீராதார மாக முல்லை பெரியாற்று நீரே இருந்து வருகிறது.
இந்நிலையில், குறைவாக வரும் நீரும் திசைமாறிச் செல்வதால் வைகை அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது.(மொத்த உயரம் 71அடி). குடிநீருக்காக விநாடிக்கு 72 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் 5 மாவட்ட குடிநீர் தேவை மற்றும் மதுரை சித்திரை திருவிழா போன்றவற்றுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே, பொதுப் பணித் துறையினர் பெரியாற்றில் ஆய்வு நடத்தி தண்ணீர் திருட்டை தடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், குடிநீர் மற்றும் மதுரை சித்திரை திருவிழாவுக்கு தண்ணீர் போது மான அளவு உள்ளது. நீர் திருட்டு குறித்து அவ்வப்போது கண்காணித்து எச்சரித்து வருகிறோம். விரைவில் மின்வாரியம், வருவாய்த் துறையுடன் ஒருங்கிணைந்து கூட்டு ஆய்வு நடத்த இருக்கிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT