Published : 05 Apr 2023 08:17 PM
Last Updated : 05 Apr 2023 08:17 PM

நிவாரணத் தொகை உயர்வு, கடற்கரையோர தடுப்புச் சுவர்... - தமிழக மீனவர் நலத் துறையின் புதிய அறிவிப்புகள்

சென்னை: மீனவர்களின் இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதாராகிருஷ்ணன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.5) மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதாராகிருஷ்ணன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:

  • மீன்பிடி கலன்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி உரிமத்தினை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்படும்.
  • தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படும் இயற்கை மரணத்திற்கான நிவாரணத் தொகை 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • கடலில் மீன்பிடிக்கும் பொழுது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் உள்ள 10,000 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு, 75 விழுக்காடு மானியத்தில், 40,000 'உயிர்காப்பு சட்டைகள்' (Life Jacket),மொத்தம் 4 கோடியே 50 லட்சம் செலவில் வழங்கப்படும்.
  • நாகப்பட்டினம் மாவட்டம், சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.
  • கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை மீன் இறங்கு தளத்தினை தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்தும் பணிகள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மற்றும் கீச்சான்குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் கடற்கரையோரத்தில் பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் மொத்தம் ரூ.49 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலிகுப்பத்தில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சின்னாங்குடி மீன் இறங்குதளம் மேம்பாட்டு பணிகள் மொத்தம் ரூ.49 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மேற்குவாடி மற்றும் ரோச்மாநகர் ஆகிய மீன் இறங்குதளங்கள் ரூ.45 கோடி செலவில் தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்தப்படும்.
  • திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைத்தல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மேலகடியப்பட்டணம் மீன் இறங்குதளம் தூண்டில் வளைவுகளுடன் கூடிய மேம்பாட்டு பணிகள் ரூ.45 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு மீன் இறங்குதளம் தூண்டில் வளைவுகளுடன் ரூ.41 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
  • திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குழி மற்றும் இடிந்தகரை, ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மற்றும் நம்புதாளை, கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் வடக்கு, தெற்கு மற்றும் சூர்யா நகர், விழுப்புரம் மாவட்டம் முட்டுக்காடு அழகன்குப்பம், வசவன்குப்பம் மற்றும் கைப்பாணிகுப்பம் ஆகிய 9 மீனவ கிராமங்களில் ரூ.40 கோடி செலவில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
  • திருவள்ளூர் மாவட்டம் நொச்சிக்குப்பம், திருவாரூர் மாவட்டம் முனங்காடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆகிய 3 மீனவ கிராமங்களில் ரூ.23 கோடி செலவில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
  • கன்னியாகுமரி மாவட்டம், அன்னை நகர் மீன் இறங்கு தளத்தினை தூண்டில் வளைவுகளுடன் மேம்படுத்துதல் மற்றும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தூர்வாருதல் ஆகிய பணிகள் மொத்தம் ரூ.25 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டிணம் மற்றும் பெரியதாழை, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வாலிநோக்கம் மற்றும் மோர்பனை ஆகிய 5 மீன் இறங்கு தளங்கள் மொத்தம் ரூ.24 கோடி செலவில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
  • திருவள்ளூர் மாவட்டம், அண்ணாமலைச்சேரி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் ஆகிய மீன் இறங்கு தளங்கள் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
  • தஞ்சாவூர் மாவட்டம், நெய்தலூர் அரசு மீன் பண்ணையில் மீன் வளர்ப்பு குளங்கள் மேம்பாட்டு பணிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு பணிகள் ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன்
  • தஞ்சாவூர் மாவட்டம் சம்பைப்பட்டிணம், காரங்குடா, பிள்ளையார் திடல், அடைக்கத்தேவன் மற்றும் கொள்ளுக்காடு ஆகிய இடங்களில் உள்ள படகு செலுத்தும் கால்வாய்கள் மற்றும் முகத்துவாரப் பகுதிகள் மொத்தம் ரூ.3 கோடியே 97 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கப்படும்.
  • திண்டுக்கல் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மூலம் ரூ.80 லட்சம் செலவில் நடமாடும் மீன்விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.
  • தமிழ்நாட்டின் அண்மை கடற்பகுதியில் குறைந்து வரும் மீன்வளத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.3 கோடி செலவில் கடலில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படும்.
  • 500 மீனவ இளைஞர்களுக்கு மீன்பிடி படகு ஓட்டுநர் பயிற்சி ரூ.31 லட்சத்து 25 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.
  • கொடுவா மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் ரூ.95 லட்சத்து 42 ஆயிரம் செலவில் கொடுவா மீன் வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்.
  • சென்னையில் வண்ணமீன் கண்காட்சி மற்றும் மீன் உணவுத் திருவிழா ரூ.50 லட்சம் செலவில் நடத்தப்படும்.
  • உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி உபகரணங்கள் வாங்கிட 50 விழுக்காடு மானியாக ரூ.1 கோடி வழங்கப்படும்.
  • சுகாதாரமான முறையில் மீன் விற்பனை செய்வதற்கான பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள், மீன் விற்பனை நிலையங்கள், குளிர்காப்பிடப்பட்ட வாகனங்கள் வாங்கிட பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 87 லட்சம் மானியம் வழங்கப்படும்.
  • மீன்வளர்ப்பு குளங்கள் அமைத்தல், இடுபொருள் வழங்குதல் மற்றும் உவர்நீர் உயிர்க்கூழ்ம (Bio-floc) மீன் வளர்ப்பு ஆகிய திட்டங்களுக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
  • கடலில் மிதவைக் கூண்டுகள் அமைத்து மீன் வளர்ப்பு மேற்கொள்ள, மீனவர்களுக்கு 40 விழுக்காடு மானியமாக ரூ.55 லட்சம் வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதற்கு ரூ.77 லட்சத்து 20 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
  • நீலகிரி மாவட்டத்தின் உயர்மட்ட நீர்நிலைகளில் 'டிரவுட் மீன்' இருப்பினை பெருக்குவதற்கு, ரூ.77 லட்சம் செலவில் கருவுற்ற முட்டைகள் எடுத்து வரப்பட்டு, வளர்க்கப்பட்டு, இருப்பு செய்யப்படும்.
  • உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிவிடும் பொருட்டு நாட்டின மீன்வகைகள் மற்றும் இந்திய பெருங்கெண்டை மீன்குஞ்சுகள் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் ஆறுகளில் இருப்பு செய்யப்படும்.
  • மதுரை மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மூலம் வண்ண மீன் உற்பத்தி மற்றும் வர்த்தக மையம் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • சென்னை மாதவரம் பகுதியிலுள்ள மணலி மற்றும் மாத்தூர் ஏரிகளை சீரமைத்து பொழுதுபோக்கு மீன்பிடிப்புடன் கூடிய சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
  • தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் வியாபார கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கு மூன்று பனிக்கட்டி நிலையங்கள் அமைத்தல் மற்றும் மூன்று டீசல் விற்பனை நிலையங்களை புனரமைத்தல் ஆகிய பணிகள் ரூ.4 கோடியே 60 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
  • தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகம் வாயிலாக வண்ண மீன் வகைகளை இறக்குமதி செய்து, உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் திட்டம் ரூ.50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x