Published : 05 Apr 2023 07:05 PM
Last Updated : 05 Apr 2023 07:05 PM

பணியாளர்கள் நல நிதி, ஆவின் இ-பால் அட்டை: தமிழக பால்வளத் துறையின் புதிய அறிவிப்புகள்

புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் நாசர்

சென்னை: இணையதளம் மூலம் ஆவின் பால் விற்பனை முதல் கட்டமாக சென்னை மற்றும் இதர மாநகரங்களில் அறிமுகம் செய்யப்படும் பால்வளத் துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.5) பால்வளத் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:

  • பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களின் நலன் காக்க "கலைஞர் சங்க பணியாளர்கள் நல நிதி" உருவாக்கப்படும். இந்த நிதி மூலம் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.5 லட்சம், திருமணத்திற்கு ரூ.30 ஆயிரம், கல்விக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
  • பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால் பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 2 லட்சம் புதிய கறவை மாடுகள் வாங்கப்படும்.
  • பால் பாக்கெட்டுகள் தயாரிக்க ரூ.30 கோடியில் ஆவின் பண்ணைகளில் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும். மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பண்ணைகளில் இது அமைக்கப்படும்.
  • ரூ.25 கோடியில் 10 ஏக்கர் பரப்பளவில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் புதிய கால்நடை தீவன ஆலை அமைக்கப்படும். ம.புடையூர் கிராமத்தில் 10 ஏக்கரில் இது அமைக்கப்படும்.
  • ரூ.4.52 கோடியில் நவீன தொழில்நுட்பங்களை அறிய 1 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
  • புதிய தொழில் நுட்பங்களை காட்சிப்படுத்தும் வண்ணம் தேசிய பால் பண்ணை வர்த்தக கண்காட்சி நடத்தப்படும். இதில் நவீன தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்கு, பயிற்சி பட்டறைகள், கண்காட்சிகள் நடத்தப்படும்.
  • ஆவினில் பால் வாங்குபவர்களுக்கு இ-பால் அட்டை (e- Milk card ) வழங்கப்படும். இதன்படி மாதந்திர பால் அட்டை இணையதளம் மூலம் வழங்கப்படும்.
  • பால் உற்பத்தியை மேம்படுத்த தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மை கொள்கை உருவாக்கப்படும். பால் கொள்முதலை வரன்முறைப்படுத்தவும், புதிய தொழில்நுட்புகளை சரியான முறையில் ஒழுங்குபடுத்தவும் பால் உற்பத்தி ஒழுங்குமுறை முறை மற்றும் கூட்டுறவு சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஆவின் விற்பனையை இணையதளம் மூலம் மேற்கொள்ள தனி இணையதளம் மற்றும் செயலி உருவாக்கப்படும். சென்னை உள்ளிட்ட இதர மாநகரங்களில் முதல் கட்டமாக இது நடைமுறைபடுத்தப்படும்.
  • பாலவளத் துறையின் தொடக்கம், வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள மாதவரம் பால் பண்ணையில் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x