Last Updated : 05 Apr, 2023 02:05 PM

13  

Published : 05 Apr 2023 02:05 PM
Last Updated : 05 Apr 2023 02:05 PM

பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கினால் முதல்வர் ஸ்டாலினை நேரில் பாராட்டுவேன்: வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் | கோப்புப் படம்

கோவை: பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கிவிட்டு, அதன் பிறகு சமூகநீதி பற்றி பேசினால், வீடு தேடிச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டத் தயாராக இருக்கிறேன் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கடந்த 3 ஆம் தேதி திமுக நடத்திய, அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பு மாநாட்டில், காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நீதி பற்றி பாடம் நடத்தியிருக்கிறார். தந்தை கருணாநிதி மறைவுக்குப் பிறகு மகன் ஸ்டாலின் திமுக தலைவராகிவிட்டார். அரை நூற்றாண்டு கடந்தும் அப்பதவிக்கு பெயரளவில் கூட வேறொருவர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தற்போது மகன் உதயநிதியை அமைச்சராக்கிவிட்டார். உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு துணையாக இருப்போம் என திமுக அமைச்சர்களே பேசும் அளவுக்கு ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்குண்டு இருக்கிறது திமுக. தந்தை, மகன், பேரனை அடுத்து கொள்ளுப்பேரனையும் தயார் படுத்திக்கொண்டு, மற்ற தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டிய கட்சித் தலைமை, ஆட்சித் தலைமையை பறிப்பதற்கு பெயர்தான் திமுகவின் அகராதியில் சமூக நீதியா?.

திமுக என்ற அரசியல் கட்சியின் தலைவராக, திமுக ஆட்சிக்கு வந்தால் முதல்வராக, என்றாவது ஒருநாள், கருணாநிதி குடும்பத்தைச் சாராத ஒருவர் வர முடியும் என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்களால் கூற முடியுமா?. அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பை நடத்தும் திமுக, சமூக நீதியை ஓரளவுக்குகாவது நடைமுறைப்படுத்த துணை முதல்வராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்குமா?

அல்லது உள்துறை, நிதி, வருவாய், தொழில், பொதுப்பணி போன்ற மிக முக்கிய துறைகளின் அமைச்சர்களாக பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை முதல்வர் முக ஸ்டாலின் நியமிப்பாரா? வாய்ப்பிருந்தும் இதனைச் செயல்படுத்துவதில் திமுகவுக்கு என்ன தயக்கம்? இப்போது அமைச்சராக இருக்கும் மகன் உதயநிதி எந்த நேரத்திலும் துணை முதல்வராக்கப்படலாம் என திமுகவினரே பேசிக் கொள்கின்றனர்.

மகனுக்குப் பதிலாக, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை மு.க.ஸ்டாலின், துணை முதல்வராக்கி, சட்டப்பேரவையில் தனக்கு அருகில் அமர வைக்க வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கிவிட்டு, அதன்பிறகு சமூக நீதி பற்றி பேசினால், வீடு தேடி சென்று ஸ்டாலினை பாராட்டத் தயாராக இருக்கிறேன்" என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x