Published : 05 Apr 2023 05:45 AM
Last Updated : 05 Apr 2023 05:45 AM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம் : 9.76 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (ஏப்ரல் 6) தொடங்குகிறது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வும் இன்றுடன் (ஏப்.5) நிறைவு பெறுகிறது.

இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (ஏப்.6) தொடங்கி ஏப்.20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல்நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தேர்வை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

இதில் 37,798 தனித்தேர்வர்கள், 13,151 மாற்றுத் திறனாளிகள், 5 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 2,640 சிறை கைதிகள் அடங்குவர். பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 55,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்டமின்சாதனங்களை கொண்டு வரதடை விதிக்கப்பட்டுள்ளது.ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண் டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாகொண்டு எழுதக்கூடாது. விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயரை குறிப்பிடக்கூடாது.

மாணவர் புகைப்படம், பதிவெண் உட்பட விவரங்கள் கொண்டமுகப்புத்தாள் முதன்மை விடைத்தாளுடன் சேர்த்து தைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாண வர்கள் கையொப்பமிட்டால் போதும்.

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீதுநடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க தேர்வுக் கட்டுப்பாட்டு அறைஅமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறைசெயல்படும். இவற்றை 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதிவெளியிடப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

6 முதல் 9-ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு: நடப்பாண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டுமென பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கேற்ப ஆண்டு இறுதித் தேர்வை நடத்திக் கொள்ள முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் பல்வேறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முழு ஆண்டுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டு வருகின்றன. அதன்படி 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏப்.11 முதல் 24-ம் தேதி வரையும், மதுரை உட்பட சில மாவட்டங்களில் ஏப்.21 முதல் 28-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x