Published : 05 Apr 2023 05:54 AM
Last Updated : 05 Apr 2023 05:54 AM
சென்னை: சென்னை விமான நிலைய புதிய முனையம் திறப்பு, சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 8-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை பழைய விமான நிலையத்துக்கு பிற்பகல் 2.45 மணிக்கு பிரதமர் வருகிறார். அங்கு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விமான முனையத்தைப் பார்வையிடுகிறார்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம், நேப்பியர் பாலம் அருகில் உள்ள ‘ஐஎன்எஸ் அடையாறு' கப்பல் படைத் தளத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று, சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையைக் தொடங்கிவைக்கிறார்.
தொடர்ந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர், கார் மூலம் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர், அங்கிருந்து விமானப் படை ஹெலிகாப்டரில், பல்லாவரத்தில் உள்ள ராணுவ மைதானத்துக்குச் செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன முனையத்தை திறந்து வைக்கிறார். மேலும், தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையைத் தொடங்கிவைத்து, ரூ.294 கோடியில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பின்னர், அங்கிருந்து சென்னை பழைய விமான நிலையம் வரும் பிரதமருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து, பிரதமர் மோடி இரவு 8.45 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு, கர்நாடகா மாநிலம் மைசூரு செல்கிறார்.
ஹெலிகாப்டர் பயணம்: மக்களுக்கும், போக்குவரத்தும் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக, சென்னை நகருக்குள் முடிந்த வரை சாலை வழிப் பயணத்தை தவிர்த்து ஹெலிகாப்டர் பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT