Published : 05 Apr 2023 06:06 AM
Last Updated : 05 Apr 2023 06:06 AM

டெல்டாவில் நிலக்கரி திட்டத்துக்கான டெண்டரை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வேண்டுகோள்

மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் வ.சேதுராமன் மற்றும் நிர்வாகிகள்.

திருவாரூர்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மன்னார்குடியில் இந்த இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் வ.சேதுராமன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய நிலக்கரி அமைச்சகம் நாடு முழுவதும் 101 இடங்களில் பூமிக்கு அடியில் இருந்து நிலக்கரி அல்லது நிலக்கரி படுகை மீத்தேன் அல்லது நிலத்தடி நிலக்கரியை வாயுவாக மாற்றி (UCG) எடுக்கும் திட்டத்துக்கு கடந்த மார்ச் 29-ம் தேதி டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மே 30-ம் தேதிக்குள் நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 101 இடங்களில், திருவாரூர், தஞ்சை மாவட்டத்துக்கு இடையே மன்னார்குடி நிலக்கரி வட்டாரத்தில் உள்ள வடசேரி பகுதியை மையப்படுத்தி 68 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள பகுதியும் அடங்கும். அதாவது, தஞ்சாவூர் மாவட்டம் கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, அண்டமி, மோகூர் கருப்பூர், பரவாத்தூர், கண்ணுகுடி, கொடியாளம், வடசேரி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கண்ணாரப்பேட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை மற்றும் தளிக்கோட்டை ஆகிய பகுதிகளில் இந்த நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த கிராமங்களில் எம்இசிஎல் நிறுவனத்தால் ஏற்கெனவே 66 ஆழ்துளை கிணறுகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில், சுமார் 463 அடியிலிருந்து 740 அடி வரையிலான ஆழத்தில் சுமார் 755 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா பகுதியில் எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. மேலும், நிலக்கரி படுகை மீத்தேன் திட்டத்துக்கு தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் கடந்த 2015-ம் ஆண்டில் பிறப்பித்த நிரந்தர தடையும் உள்ளது.

எனவே, இப்பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்துக்கு விடப்பட்டுள்ள டெண்டரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், தமிழக அரசும் இவ்விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தத் திட்டம் குறித்து உள்ளிக்கோட்டை விவசாயிகள் கோவிந்தராஜ், சாமித்துரை, வெண்ணிலா ஆகியோர் கூறியதாவது: கடந்த 2013-ம் ஆண்டு வரை இப்பகுதியில் மீத்தேன் திட்டம் அறிவிக்கப்பட்டு பெரும் அச்சம் ஏற்பட்டிருந்த நிலையில், அப்போது இத்திட்டத்துக்கு தடை விதித்து திருவாரூர், தஞ்சை மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றபோது, கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி, இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்ததால் நிம்மதி அடைந்திருந்தோம்.

இந்நிலையில், மத்திய அரசின் தற்போதைய டெண்டர் அறிவிப்பால் சம்பந்தப்பட்ட கிராம விவசாயிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எங்களது வாழ்வாதாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டு உள்ளது. விவசாயிகளின் நிலையை அறிந்து, மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x