Published : 05 Apr 2023 06:23 AM
Last Updated : 05 Apr 2023 06:23 AM

பாஜக - காங். மோதல் தொடர்பாக 14 பேர் கைது: குமரியில் 53 பேர் மீது வழக்கு; பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாஜக அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.

நாகர்கோவில்: நாகர்கோவிலில் பாஜகவினர் - காங்கிரஸார் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 53 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக மாவட்டத் தலைவர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி இழப்பைக் கண்டித்து குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து இளைஞர் காங்கிரஸார் பேரணியாக சென்றனர். வழியில் உள்ள பாஜக அலுவலக வாயிலில் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி, அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர்.

அந்நேரத்தில் அலுவலகத்துக்குள் இருந்த பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் வெளியே வந்து அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். அந்நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இரு தரப்பினரும் கொடிக்கம்பங்களாலும், கற்களாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் நின்ற வாகனங்கள், கடைகள் கல்வீச்சில் சேதமடைந்தன. 6 பேர் காயம் அடைந்தனர்.

மோதல் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் மாநகர் மாவட்டதலைவர் நவீன்குமார், நிர்வாகிகள் லாரன்ஸ், விமல் உட்பட 25 பேர் மீதும், பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ், மகாதேவன் பிள்ளை, ஆறுமுகம் உட்பட 28 பேர் மீதும் போலீஸார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டைசன் உட்பட காங்கிரஸார் 11 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுபோல் பாஜக தரப்பில் குமரி மாவட்டத் தலைவர் தர்மராஜ், தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன், சொக்கலிங்கம் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

பாஜக அலுவலகம், விஜய் வசந்த் எம்.பி. அலுவலகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வீடு, எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ வீடு மற்றும் கட்சித் தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x