Published : 04 Sep 2017 04:40 PM
Last Updated : 04 Sep 2017 04:40 PM

தரமணியில் சாலை விபத்து: காப்பாற்ற ஆளில்லாமல் தாயின் கண்ணெதிரே உயிரிழந்த குழந்தை

சென்னை தரமணி கலிங்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் ரமோலா(34). இவரது கணவர் அமெரிக்காவில் ஓட்டல் ஒன்றில் பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஒரே மகள் பெலிண்டா(4). அருகிலுள்ள பள்ளியில் யூகேஜி படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ரமோலா தனது குழந்தை பெலிண்டாவுடன் திருவான்மியூரில் உள்ள தனது தோழி வீட்டுக்குச் செல்வதற்காக புறப்பட்டார்.

மதியம் 12.30 மணியளவில் சாலையில் வாகனங்கள் குறைந்த அளவே செல்லும் தரமணியிலிருந்து மத்திய கைலாஷ் பகுதியை நோக்கி அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு வாகனம் ரமோலாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் சாலையில் விழுந்தனர்.

ரமோலாவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. ஆனால் குழந்தை பெலிண்டா தூக்கி வீசப்பட்டு,  சாலையோரம் உள்ள தடுப்பில் தலை மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய குழந்தையை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாமால் ரமோலா அழுதுகொண்டிருக்க நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரும் உதவிக்கு வரவில்லை. அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர்களும், வாகனங்களும் கூட நின்று உதவவில்லை.

இதனிடையே சிலர் தங்கள் நண்பர்களுக்கு இந்த விபத்துக் காட்சிகளை அனுப்ப தனது செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதை எதிர்புறம் இருந்து பார்த்த செந்தில்குமார் என்பவர் சாலையைக் கடந்து ஓடி வந்து குழந்தையைக் காப்பாற்றி அடையாரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

இடையில் நடந்த உயிர் போராட்டத்தை செந்திலிடம் கேட்டபோது ஆற்றாமையுடன் அவர் கூறியது.

நான் வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். எனக்கு எதிர்புறச்சாலையில் கும்பலாக இருந்ததைப் பார்த்து சாலையைக் கடந்து வேடிக்கை பார்க்கச் சென்றேன்.

அங்கு ஒரு குழந்தை ரத்த வெள்ளத்தில் துடிப்பதையும் அவரது தாயார் பக்கத்திலிருந்து அழுவதையும் பார்த்தேன். சிலர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். யாரும் உதவ முன் வரவில்லை. வாகனங்களில் செல்வோர் வேடிக்கை பார்த்தப்படி அந்தப் பகுதியை கடந்து கொண்டிருந்தனர்.

அதைவிட கொடுமை சிலர் அதை செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர். நான் உடனடியாக அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் இடித்துவிட்டுச் சென்ற வாகனம் பற்றி கேட்டேன் , அங்குள்ள யாருக்கும் அதைப் பற்றி தெரியவில்லை.

குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவர்களை அழைத்தேன். ஆக்சிடெண்ட் கேஸு சார் வேண்டாம் என வர மறுத்துவிட்டனர். பட்டப்பகலில் வெயில் அவ்வளவு கும்பல் நடுவே குழந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

அந்தப் பக்கம் செல்கிற கார்களை மறித்து உதவி கேட்டும் ஒருவரும் பிரச்சினைகளில் சிக்கக் கூடாது என்பதற்காக வர மறுத்துவிட்டனர். அந்த நேரம் நான்கைந்து வாகனத்துக்கு பின்னால் காரில் வந்த ஒரு குடும்பம் மனிதாபிமானத்துடன் காரில் ஏற்றிக்கொண்டனர்.

குழந்தையுடன் விரைவாக அதே சாலையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அவர்கள் குழந்தைக்கு முதலுதவி கூட அளிக்காமல் உடனடியாக குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டனர்.

நாங்கள் மீண்டும் அதே காரில் குழந்தையுடன் அடையார் நோக்கி சென்றோம். குழந்தைக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுவதால் அடையாரிலுள்ள இன்னொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு சிகிச்சைக்கு சேர்த்த சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்து போனது.

குழந்தையை காரில் ஏற்றிவந்த குடும்பத்தினர் மிகவும் வருத்தப்பட்டனர். கார் முழுதும் குழந்தையின் ரத்தம். ஆனாலும் குழந்தையின் மரணம் அவர்களை அதிகம் வருந்தச் செய்தது.  விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால் ஒரு வேலை பிழைத்திருக்கலாம். இவ்வாறு செந்தில் குமார் கூறினார்.

மோதிய வாகனம் எதுவென்று கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா இருந்தும் பதிவு இல்லை.

சம்பவ இடத்திற்கு போக்குவரத்து கூடுதல் ஆணையர் பெரியய்யா நேரில் வந்து விசாரணை நடத்தினார். சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் அன்புவும் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

இது பற்றி போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பெரியய்யாவிடம் பேசியபோது அவ்ர் கூறியதாவது:

மத்திய கைலாஷ் அருகே நேற்று மதியம் நடந்த விபத்தில் 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. துப்புத்துலங்குவதில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதே?

அந்த விபத்தில் அவர் ஓட்டி வந்த வாகனத்தின் பின்னால் வந்த வாகனம் மோதியதா, அல்லது இவர் ஓவர் ஸ்பீடு போனாரா என்பது விசாரணையில் தெரியவரும். அந்த இடத்தில் ஐஐடி கேமரா உள்ளது. மெமரி பேக்கப் இல்லாம இருக்கிறது. ஆனால் அருகில் உள்ள சில கேமராக்கள் கண்காணிப்பு பதிவை சேகரித்துள்ளோம். அதனால் விரைவில் துப்பு துலங்கும்.

தரமணி ஓ.எம்.ஆர்.சாலை போன்ற சாலைகள் அதிகம் விபத்து நடக்கும் பகுதிகள். ரேஸ் ஓட்டுவதும் அதனால் விபத்தும் நடக்கும் பகுதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் அல்லவா?

ஆமாம், கண்டிப்பாக, அந்தப் பகுதியில் பொருத்தப்பட வேண்டும். அதற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை வர உள்ளது. நாங்களும் எழுதியுள்ளோம், அரசு தரப்பிலும் நடவடிக்கை எடுக்க உள்ளார்கள். தானாக பதிவு செய்யும் நவீன கேமராக்களை பதிவு செய்ய உள்ளோம்.

இப்போது நடந்த விபத்தை இங்கு உள்ள கேமராக்களை வைத்து துப்பு துலக்குவோம். விரைவில் 2700 கேமராக்கள் பொறுத்தப்படும் திட்டம் வர உள்ளது. அதில் இந்தபகுதியில் எல்லாம் கட்டாயம் பொருத்துவோம்.

இந்த விபத்தில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உதவ முன வரவில்லை, விபத்து வழக்கு வரும் என்று ஒதுங்கும் நிலை உள்ளதே?

பொதுமக்கள் ஒதுங்கும் நிலை உள்ளது. இந்த மாதிரி இக்கட்டான நிலையில் தான் அவர்கள் உதவ வேண்டும். அதுதான் மனிதாபிமானம். அவர்கள் சாட்சிக்கு வர வேண்டும் என்று அழைக்கப் போவதில்லை. விருப்பப்படாவிட்டால் போலீஸார் கூப்பிட மாட்டார்கள்.

ஆகவே விபத்து ஏற்பட்டால் உடனடியாக உதவ வேண்டும். ஒருத்தருக்கு ஒருத்தர் உதவ வேண்டும். எல்லா இடத்திலும் போலீஸாரை எதிர்பார்க்கமுடியாது. இந்த விபத்திலும் பொதுமக்கள் உதவியுள்ளனர். செந்தில்குமார் என்ற வாலிபர் முன் முயற்சி எடுத்து உதவியுள்ளார். கட்டாயம் அவரை காவல்துறை பாராட்டும்.

சமீபகாலமாக விபத்து நடக்கும் இடங்களில் பொதுமக்கள் விபத்தில் சிக்கியவரை மீட்பதை விட வேடிக்கை பார்ப்பதிலும், அதை படமெடுத்து ஃபேஸ்புக் வாட்ஸ் அப்பில் போட்டு பாராட்டு வாங்கும் மன நிலைக்கு ஆளாகியுள்ளது மனிதாபினம் குறைந்து வருவதை காட்டுகிறதா? அல்லது விஞ்ஞான வளர்ச்சியில் மறத்து போய்விட்டார்களா? இது குறித்து குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளர், தேவநேயனிடம் பேசிய போது, அவர் கூறியதாவது:

 

சமீபகாலமாக விபத்து நேரங்களில் காப்பாற்றுவதை விட வீடியோ படம் பிடிப்பது அதிகமாகியுள்ளதே?

சமீப காலமாக வன்முறைகளைப் பார்த்து தாங்கிக்கொள்வதல்ல ரசிக்கும் மனோ பாவம் வந்துவிட்டதோ? ரசிக்கிறது என்ற வார்த்தை தவறாக தோன்றலாம். ஆனால் அது எப்படி என்றால் கேமராவில் இது போன்ற சம்பவங்களை படம் பிடிப்பது அய்யோ பாவம் என்று வருத்தப்படுவதையெல்லாம் தாண்டி, ரத்தத்தையும், விபத்தையும் சாதாரண விஷ்யமாக பார்க்கப்படுகிற பெரிய கொடூரம் இது.

அடிப்படையில் உளவியலாக பெரிய பாதிப்பை உருவாக்குகிறது, சமூகத்துக்கான உளவியல் பாதிப்பு இது. தனிப்பட்ட பாதிப்பு அல்ல, இது உளவியல் பாதிப்புக்கான நீட்சியாக பார்க்கிறேன். இது எவ்வளவு ஆபத்து என்றால் அடுத்தவனுக்கு உதவி செய்வதையெல்லாம் தாண்டி, அதை செய்தால் சிக்கல் வரும் என்பதைத் தாண்டி உதவி செய்ய வில்லை என்றால் இந்த சமூகம் எங்கே போகிறது.

விபத்து ஏற்பட்டவுடன் நான்தான் முதலில் வீடியோ எடுத்துப் போட்டேன் என மார்தட்டி கொள்வதில் உள்ள ஆனந்தம், ஆக்சிடெண்ட் போட்டேன் எத்தனை லைக் பாரு என்று ஆனந்தம் அடைவது. ஆக்சிடெண்டே கூடாது என்ற மனோ நிலை தாண்டி லைக்குக்காக வீடியோ எடுக்கும் மனோபாவம்

நாமெல்லாம் 'ஆக்டிவிஸ்ட்டாக' இருப்பதை விட டிவிட்டிஸ்ட்டாக  இருக்கிறோம். இதிலிருந்து வெளியே வராவிட்டால் நாளை எதுவேண்டுமானாலும். ஆகவே மனிதாபிமானமே முக்கியம் என்பதை மறக்கக் கூடாது என்று தேவநேயன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x