Last Updated : 04 Apr, 2023 08:59 PM

2  

Published : 04 Apr 2023 08:59 PM
Last Updated : 04 Apr 2023 08:59 PM

“இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெல்லும்” - காரணங்கள் அடுக்கி இபிஎஸ் நம்பிக்கை

கோவை மாவட்ட அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை, கிரீடம் அணிவித்து வாழ்த்து | படம்: ஜெ.மனோகரன்.

கோவை: “இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி கே.பழனிசாமி முதல்முறையாக இன்று (ஏப்.4) கோவை வந்தார். அவருக்கு தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், கோவை மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற வாழ்த்து தெரிவிக்கும் விழாவில் கலந்துகொண்டு கே.பழனிசாமி பேசியதாவது: “அதிமுகவில்தான் சாதாரண தொண்டன் கூட உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை அடைய முடியும். வேறு எந்தக் கட்சியிலும் இது நடக்காது.

திமுக என்றால் கருணாநிதியின் குடும்பம்தான் ஆட்சி புரியும். கட்சிப் பதவிக்கும் வர முடியும். ஆனால், ஜனநாயக அமைப்புள்ள கட்சி அதிமுக. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்கூட எம்.பி., எம்எல்ஏக்கள் ஆக முடியும். முதல்வர்கூட ஆக முடியும். மற்ற கட்சிகளில் மிராசுதாரர்கள், தொழிலதிபர்கள்தான் பதவிக்கு வர முடியும். திமுக ஒரு கம்பெனிபோல் செயல்பட்டு வருகிறது. அந்த கம்பெனியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இயக்குநர்களாக கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள்தான் கட்சியிலும் உள்ளனர். ஆட்சி, அதிகாரத்திலும் பங்கு வகிக்கின்றனர். குடும்பத்துக்காக உழைக்கும் கட்சி திமுக.

திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்த 2 ஆண்டுகளில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. எப்போது இந்த ஆட்சி அகலும் என்று மக்களின் குரல் தமிழகம் முழுவதும் ஒலித்துவருகிறது. இரண்டே ஆண்டுகளில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ள அரசு திமுக அரசு. ஊழலுக்காக இந்தியாவில் கலைக்கபட்ட் ஒரே அரசு திமுக அரசுதான். ஊழலின் ஊற்றுக்கண்ணே திமுகதான். அவர்கள் அதிமுகவை பார்த்து ஊழல் செய்துள்ளனர் என்கின்றனர். அதிமுக இனி எந்தத் தேர்தல் வந்தாலும் வெற்றிபெறும்.

திறமையற்ற, பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். அவர் செய்கிற ஒரே வேலை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது வழக்குப் போடுவது. மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட கோவை பகுதிகளை இணைக்கும் திட்டத்துக்கு கடந்த ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். கோவை நகரின் பல பகுதிகள் தோண்டப்பட்டு அப்படியே கிடக்கிறது. மக்கள் சாலைகளில் செல்ல முடியவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கடந்த ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் அந்த திட்டம் அறிவிக்கப்பட்டதுபோல் பொய்யான தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொத்துவரி, குடிநீர் கட்டணம், மின்கட்டணம், குப்பை வரி உயர்வு என மக்கள் தலையில் சுமையை சுமத்தியுள்ளனர். இதுதான் திமுகவின் சாதனை. ஒரு புதிய திட்டத்தையாவது கோவைக்கு அறிவித்துள்ளனரா. மக்களை ஏமாற்றும் கவர்ச்சிகர அரசியல் செய்து வருகின்றனர். பல கட்சிக்கு சென்று வந்த, எந்த கட்சிக்கும் விசுவாசமில்லாத அமைச்சர் ஒருவர், கொள்ளையடித்த பணத்தை வைத்து கோவை மக்களை ஏமாற்றி வருகிறார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற வேண்டும். தேர்தல் பணிகளை இப்போதிருந்தே நிர்வாகிகள், தொண்டர்கள் தொடங்க வேண்டும். புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏக்கள் அம்மன் கே.அர்ஜூனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், செ.தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், பொன் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x