Published : 04 Apr 2023 06:57 PM
Last Updated : 04 Apr 2023 06:57 PM

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா பாதித்த முதியவர் உயிரிழப்பு

மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். அவரது மனைவி கரோனா தொற்றுக்கு ஆளாகி, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கரோனா தொற்று பல்வேறு நாடுகளை முடக்கியது. உலக நாடுகள் போட்டிப்போட்டு தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்தியாவில் கரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரித்து வருகிறது. தமிழகத்திலும் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் நாள்தோறும் 10-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில், வெள்ளக்கோவில் கே.பி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (82), அவரது மனைவி பழனியாத்தாள் (78) ஆகியோர் கோவையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றிருந்தனர். இதையடுத்து சுப்பிரமணி, கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் சளி காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று உறுதியானது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது மனைவி பழனியாத்தாள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று உறுதியானது கண்டறியப்பட்டது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினர் தரப்பில் வெள்ளகோவிலில் முதியவர் வசித்து வந்த வீடு மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x