Published : 04 Apr 2023 06:48 PM
Last Updated : 04 Apr 2023 06:48 PM
சென்னை: சென்னையில் உள்ள மிகப் பழமையான பூங்காக்களில் ஒன்றான திரு.வி.க பூங்கா 12 ஆண்டுக்குப் பின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இதில் செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் காரணமாக செனாய் நகர், திரு.வி.க. பூங்கா 2011ம் ஆண்டில் மூடப்பட்டது.
சென்னையில் உள்ள மிகப் பழமையான பூங்காக்களில் ஒன்று செனாய் நகரில் அமைந்துள்ள திரு.வி.க பூங்கா. 8.8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது. மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு இந்தப் பூங்கா சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இதன்படி 2018ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு பணிகள் நிறைவு பெற்றது.
ரூ.18 கோடி செலவில் பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்தப் பூங்கா மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, படிப்பகம், சறுக்கு விளையாட்டு, குழந்தைகள் பூங்கா, திறந்தவெளி அரங்கம், மட்டைப்பந்து பயிற்சிக் கூடம், நடைப்பயிற்சி பாதை, செயற்கை நீரூற்று, இரவு நேரத்தில் பல வண்ண செயற்கை நீரூற்றுகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், யோகா மற்றும் தியானப் பயிற்சிக் கூடம், கூடைப்பந்து, பூப்பந்து, கடற்கரை கைப்பந்து மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தில் உள்ள 4.3 லட்சம் சதுர அடி பகுதியில் 2.1 லட்சம் சதுர அடியில் கடைகளும், 1.7 லட்சம் சதுர அடியில் பார்க்கிங் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 404 கார்கள் மற்றும் 893 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். இந்தப் பூங்காவில் 5400 மரங்கள் நடப்பட்டு நன்கு வளர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT