Published : 04 Apr 2023 06:39 PM
Last Updated : 04 Apr 2023 06:39 PM
சென்னை: "எல்லோருக்குமான அரசு எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு, ஒரு தரப்பினரை நிறைவுறச் செய்ய தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மகாவீரர் திருநாளுக்காக இறைச்சிக் கடைகளை மூடும் எதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டுமென திமுக அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மகாவீரர் போற்றுதலுக்குரியவர் என்பதிலோ, அவரது திருநாளைக் கொண்டாட வேண்டுமென்பதிலோ எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.
ஆனால், அதனைக் காரணமாகக் காட்டி, இறைச்சிக் கடைகளை மூடச் சொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. உணவு என்பது அவரவர் விருப்பவுரிமை; அதில் அரசு தலையிட்டுத் தடைசெய்வது என்பது பாசிசம். இங்கு சமணத்தைத் தழுவி நிற்கும் மார்வாடி மக்களின் உணர்வுக்காகவே இறைச்சிக்கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்படுகிறது. இது கண்டிக்கப்பட வேண்டிய நடவடிக்கை.
தமிழர்களின் திருநாளான பொங்கல் பெருவிழாவுக்கு ராஜஸ்தானில் எவ்வித விடுமுறையுமில்லாதபோது, மார்வாடிகள் மகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக அவர்களது வசதிக்காகவும், உணர்வுக்காகவும் தமிழ்நாட்டிற்குள் இறைச்சிக் கடைகளை மூடுவது சரியானதல்ல. மார்வாடிகள் மகாவீரர் திருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, தமிழர்கள் இறைச்சியுண்ண தடைவிதிப்பதென்பது அப்பட்டமான ஜனநாயகத் துரோகம்.
‘எல்லோருக்குமான அரசு’ எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு, ஒரு தரப்பினரை நிறைவுறச் செய்ய தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இறைச்சிக் கடைகளை மூடும் எதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என்று சீமான் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT