Published : 04 Apr 2023 06:02 PM
Last Updated : 04 Apr 2023 06:02 PM

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக நிரப்பப்படாத கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் - பாதிப்புகள் என்னென்ன?

மதுரை: 2019-ம் ஆண்டு முதல் மூன்று முறை கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு அறிவித்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்படாததால் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் வாரவிடுமுறையே இல்லாமல் பணிபுகிறார்கள்.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களாக 4900 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கால்நடைகள் வளர்ப்பு தொழில் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதால் ஏராளமானோர் கால்நடைகள் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், கால்நடை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும் அளவிற்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை.

மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு ஆய்வாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணிநிலைகளிலும் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளன. இதில், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. நாளை கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கை வரும் நிலையில், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா என்று கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ''கால்நடை பராமரிப்பு உதவியாளராக பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணிபுரிந்தாலும் எந்தவித பதவி உயர்வும் இல்லாமல் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களாகவே ஓய்வு பெறும் அவல நிலை உள்ளது. பணியில் சேர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு கால்நடை ஆய்வாளர்களுக்கான நிலை 2 பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரையும் தேர்வு செய்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கால்நடை பராமரிப்பு உதவியாளர்களின் பதவி சி கிரேடு நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டு பணி புரிவதால் சீருடைமுறையை ரத்து செய்து ஆணை வழங்கிட வேண்டும்.

கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கால்நடை உதவி மருத்துவர்களுடன் இணைந்து அனைத்து திட்டப் பணிகளையும், மருந்தகங்களில் அன்றாட பணிகளிலும், உடற்கூறு பணிகளின்போதும் உடன் பணி செய்கின்றனர். அதனால், எங்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் இதே பணியில் மற்றவர்களுக்கு வழங்குவது போன்று எங்களுக்கும் ஆபத்து ஈட்டு படி வழங்க வேண்டும்.

கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இன்று வரை மூன்று முறை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பின்னர் ஒருமுறை ரத்து செய்யப்பட்டு பின்னர் இரண்டு முறை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதுவும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று வரை தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை.

அதுபோல கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு வார விடுமுறை என்பதே கிடையாது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்குகூட வார விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால், அரசுத் துறையில் பணிபுரியும் எங்களுக்கு வார விடுமுறை கூட கிடையாது. தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும் கூட பணிக்கு வர வேண்டிய நிலை உள்ளது.

கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு அமைச்சுப் பணி பிரிவில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் கோரி வருகிறோம். அதையும் கண்டு கொள்ளவில்லை. இப்படி எங்களுடைய எல்லா கோரிக்கைகளையுமே கடந்த கால அதிமுக ஆட்சியிலும் சரி தற்போதைய தி.மு.க.ஆட்சியிலும் சரி அரசுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் என யாருமே கண்டு கொள்வதில்லை'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x