Published : 04 Apr 2023 04:36 PM
Last Updated : 04 Apr 2023 04:36 PM

தமிழகத்தில் கரோனா பாதித்தோரில் 91% பேருக்கு XBB வகை தொற்று

கரோனா சோதனை | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களில் 91 சதவீத பேருக்கு XBB வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 150-ஐ கடந்துவிட்டது. நேற்று (ஏப்.4) மட்டும் தமிழகத்தில் 186 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று (திங்கள்கிழமை) ஒரே நாளில் புதிதாக 3,038 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,179 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. மேலும், கரோனா தொற்று சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 91 சதவீத பேருக்கு XBB வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி முதல் மார்ச் வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 144 பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 86 மாதிரிகள் தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களிடம் இருந்தும், 36 மாதிரிகள் சமூகத்தில் இருந்தும், 20 மாதிரிகள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டது.

இந்த 144 மாதிரிகளில், 131 மாதிரிகள் XBB வகை கரோனா தொற்றும், 10 மாதிரிகளில் BA.2 வகை தொற்றும், 2 மாதிரிகளில் BA.5 வகை கரோனா தொற்றும், 1 மாதிரியில் B.1.1 வகை கரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி 91 சதவீத மாதிரிகளில் XBB வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் XBB மற்றும் BA.2 வகை ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

XBB வகை தொற்று : இந்த XBB வகை தொற்று வேகமாக பரவக் கூடியதாக உள்ளது. தும்மல் மூலமாக கூட அடுத்தவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது பாதிப்பு எண்ணிகை அதிகரித்து வருகிறது. ஆனால், மரணங்களின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகி வருகிறது. தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையும் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. மேலும், இந்த வகை வைரஸ்களில் வீரியம் குறைவாகவே உள்ளது. வேகமாக பரவும் என்கிற காரணத்தால் தான் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x