Last Updated : 04 Apr, 2023 01:05 PM

 

Published : 04 Apr 2023 01:05 PM
Last Updated : 04 Apr 2023 01:05 PM

ஜிப்மரில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் ரத்து; புதுச்சேரி புறக்கணிப்பு: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: ஜிப்மரில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் அமையவிருந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ''அதானிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றால் விசாரணை வைக்க ஏன் மோடி தயங்குகிறார். இந்திய நாடாளுமன்றம் ஒரு நாள் கூட நடக்கவில்லை. இது ஜனநாயகப் படுகொலை. மோடி இவ்விவகாரத்தில் பதில் தர வேண்டும். விசாரணை வைக்கும் வரை காங்கிரஸ் ஓயாது. போராட்டம் தொடரும். புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசில் ஜிப்மருக்கு 50 ஏக்கர் நிலத்தை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்துக்காக ஒதுக்கி தந்தோம். இந்த பிரத்யேக மருத்துவமனை ரூ.900 கோடியில் அமைய இருந்தது.

இதற்காக நிலத்தை சேதராப்பட்டில் ஒதுக்கி தந்தோம். தற்போது அத்திட்டத்தை மத்திய அரசு வேறு மருத்துவமனைக்கு மாற்றி உள்ளது. தென்மாநிலங்களிலேயே முக்கியமாக அமைய இருந்த இந்த மையத்தை மாற்றி இருப்பது மூலம் புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஜிப்மரில் அனைவருக்கும் இலவச சிகிச்சை தரப்பட்டது, மருந்து தட்டுப்பாடு இல்லை. சிறப்பாக செயல்பட்ட ஜிப்மர் தற்போது சீரழிந்து விட்டது. நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். தற்போது உயர் சிகிச்சைக்கும் கட்டணம் விதித்துள்ளனர். இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். புதுச்சேரி சட்டப் பேரவையில் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு என பல அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். அது வரவேற்க்கத்தக்கது. ஆனால் அதற்கான நிதி எங்கே உள்ளது. ஆண்டுக்கு ரூ.700 கோடி தேவை. ஆனால் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இதை செய்யாமல் கோப்புகளை தயாரித்து அனுப்பும்போது தலைமைச்செயலர், செயலர்கள் விதிமீறி ஒப்புதல் தர மறுத்தால் அவர்கள் மீது பழிபோடுவது ரங்கசாமியின் வழக்கம்.

பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு சங்க ஊழியர்கள் போல் இவர்களையும் நடுத்தெருவில் ரங்கசாமி நிறுத்தப்போகிறார். அவர் விளம்பர அரசியல் செய்வது எடுபடாது. ரேஷன் கடைகளை திறந்து மானிய விலையில் பொருட்களைத் தருவதாகக்கூறி விட்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தராதது ஏன் என நான் எழுப்பிய எக்குற்றச்சாட்டுக்கும் முதல்வர் ரங்கசாமி பேரவையில் வாயே திறக்கவில்லை. அதேபோல் புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டை வைத்துள்ள மகளிருக்கு ஆயிரம் ரூபாய் திட்ட விதிமுறைகளால் எந்த மகளிருக்கும் பயன் தராத வகையில் தவறான திட்டமாகவுள்ளது. புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x