Published : 04 Apr 2023 05:48 AM
Last Updated : 04 Apr 2023 05:48 AM

பெண்கள், இளைஞர்களை உறுப்பினராக்க வேண்டும் - திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: திமுக அரசின் திட்டங்கள், அதன் பயன்களை எடுத்துக் கூறி, ஒரு கோடி உறுப்பினர்களை விரைவில் சேர்க்க வேண்டும். அதில் பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க விழாவில், நாம்செலுத்தும் நன்றியாக, உறுப்பினர்களை இருமடங்காக்கி, 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்ட வேண்டும் என மார்ச் 22-ம்தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, ‘உடன்பிறப்புகளாய் இணைவோம்’ என்ற முழக்கத்துடன் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி ஏப்.4-ம் தேதி (இன்று) முதல் நடைபெறுகிறது. கொளத்தூர் தொகுதியில் நான் நேரடியாக இதைத் தொடங்கி வைக்க உள்ளேன். அதைத்தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டக் கழக நிர்வாகங்களுக்கும் உட்பட்ட தொகுதிகளில் ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளைவாரியாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி முனைப் பாக நடைபெறும்.

புதிதாக உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான விதிமுறைகள் - வழிமுறைகள், தொகுதிவாரியாக உறுப்பினர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாவட்டக் கழகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் இணைந்து உறுப்பினர் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

2 ஆண்டு திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, அவர்கள் விருப்பத்துடன் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தியுங்கள். ரூ.4 ஆயிரம் கரோனா நிவாரணம், மளிகைத் தொகுப்பு, பொங்கல் பரிசுத் தொகை உள்ளிட்டவை மக்களிடம் முறையாகச் சென்று சேர்ந்ததை உறுதி செய்யுங்கள். ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம்,புதுமைப் பெண் திட்டம் என பலனளிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை எடுத்துக் கூறுங்கள்.

செப்.15 முதல் மாதம் ரூ.1000, ஒரு கோடி குடும்பத் தலைவியருக்கு வழங்கப்பட உள்ளதை அனைவரும் அறிந்திருப்பர். பெண்களின் சுயமரியாதையை காக்கும் திராவிட கருத்தியல் அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்த உள் ளதை எடுத்து கூறுங்கள்.

நான் முதல்வன் திட்டம், புதியதொழில் முதலீடுகளால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றை விளக்கி கூறுங்கள். பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் திமுகவின் உறுப்பின ராகும் வகையில்உங்கள் பரப்புரை அமைய வேண்டும்.

உறுப்பினர் கட்டணம் ரூ.10. வாக்காளர் அடையாளஅட்டையை ஆதாரமாகக் கொண்டே உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர். அதனால், புதிய உறுப்பினர் எந்த தொகுதி, எந்த மாவட்ட கழகத்துக்கு உட்பட்ட, எந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்துபவர் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டு, உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் www.udanpirappu.com என்ற இணையதளம் வழியாகவும் உறுப்பினராக சேரலாம். இரண்டு கோடி உடன்பிறப்புகள் என்ற இலக்குடன் கழகத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை இருமடங்காக்கும் புதிய உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு, அனைத்துப் பகுதிகளிலும் விரைவாக நடைபெற வேண்டும்.

திமுகவின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள், திராவிட மாடல்ஆட்சியின் திட்டங்களால் பயன் பெற்றவர்கள், பெற இருப்பவர்கள் விரும்பி புதிய உறுப்பினர்களாக இணையும்போது, திமுகவின் வலிமை பெருகும். இதுஅடுத்தடுத்த தொடர் வெற்றி களுக்கு உத்தரவாதம் அளிக்கும்.

தற்போதுள்ள ஒரு கோடி உறுப்பினர்களுடன் மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து அதன் விவரங்களை தலைமைக் கழகத்துக்கு விரைந்து அனுப்ப வேண்டும். ஜூன் 3-ல் திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்படும்போது, புதிய உறுப்பினர்கள் எண்ணிக்கையும் கோட்டம் போல் உயர்ந்து நிற்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x