Published : 04 Apr 2023 06:28 AM
Last Updated : 04 Apr 2023 06:28 AM
சேலம்: தேசிய கட்சியான பாஜகவில் மத்தியில் உள்ளவர்கள்தான் கூட்டணி குறித்து முடிவு செய்வார்கள், மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமி, சொந்த மாவட்டமான சேலத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். இந்நிலையில், சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள எம்ஜிஆர் - ஜெயலலிதா சிலைகளுக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் பொதுச்செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், எம்ஜிஆர் - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தேன். அதிமுக தொண்டர்கள் எழுச்சியோடு இருப்பதை பார்க்கிறேன். மத்தியில் ஆளுகின்ற பாஜக, ஒரு தேசியக் கட்சி. அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை, அதன் தேசிய தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல.
ஜெயலலிதா காலம் தொடங்கி, தற்போது வரை அதிமுகவில் தேசிய கட்சிகளிடம் மத்தியில் இருப்பவர்களுடன்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோருடன், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
தமிழகத்தில் இருக்கும் பாஜக தலைவர்கள் பலரும், கூட்டணி குறித்து டெல்லி தலைமைதான் முடிவெடுக்கும் என்று கூறியிருக்கின்றனர். கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது, மத்தியில் இருப்பவர்களுடன்தான், மாநிலத்தில் இருப்பவர்களிடம் அல்ல.
கட்சியில் இணையலாம்: அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். மாற்றுக் கட்சியினர் பலர் அதிமுகவில் இணைகின்றனர். ஒருவர் மாற்றுக் கட்சியில் இணைவது, அவரது மனநிலையைப் பொறுத்தது. இது ஜனநாயக உரிமை.
அதிமுகவை தொடங்கியபோது, எம்ஜிஆர் ஏராளமான சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவும் பல சோதனைகளை சந்தித்தார். பொதுவாக தலைவர்களாக இருப்பவர்கள், சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் வெல்வார்கள். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT