Published : 04 Apr 2023 04:22 AM
Last Updated : 04 Apr 2023 04:22 AM
சென்னை: நாடு முழுவதும் சமூக நீதியை நிலைநாட்ட, நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். அது கூட்டுக் குரலாக, கூட்டணிக் குரலாக அமைய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த ஆண்டு பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார். இதையொட்டி, 2022 பிப். 2-ம் தேதி அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பை அறிவித்தார். இதில், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன.
இந்த நிலையில், கூட்டமைப்பின் முதல் மாநாடு டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. ‘சமூக நீதிப் போராட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வது மற்றும் சமூக
நீதி இயக்கத்தின் தேசியத் திட்டத்தில் இணைவது’ என்பது மாநாட்டின் கருப்பொருளாக அறிவிக்கப்பட்டது.
அகில இந்திய ஓபிசி கூட்டமைப்புத் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான வி.விஸ்வேஸ்வரய்யா வரவேற்றார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் பி.வில்சன் முன்னிலை உரையாற்றினார். சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: சமூக நீதிக்கானப் போராட்டம் என்பது, ஒரு மாநிலம் அல்லது சில மாநிலங்களுக்கான பிரச்சினை அல்ல. அனைத்து மாநிலங்களுக்குமான பிரச்சினையாகும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால், பிரச்சினை ஒன்றுதான். புறக்கணிப்பு, ஒதுக்குதல், தீண்டாமை, அடிமைத்தனம், அநீதி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை முறியடிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூக நீதி. அதுதான் இடஒதுக்கீடு என்ற கருத்தியல். இதை யார், எந்த நோக்கத்துக்குப் பயன்படுத்து கிறார்களோ, அதைப் பொறுத்து வெற்றியும், பலனும் இருக்கும்.
சமூகம் மற்றும் கல்வி என்பதில், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜக அரசு வஞ்சகமாகச் சேர்த்துவிட்டது. பொருளாதாரம் என்பது நிலையான அளவுகோல் அல்ல. பணம் இருப்பதையே ஒருவர் மறைக்கலாம். உயர் சாதி ஏழைகள் என்று கூறி, பாஜக வழங்கும் இடஒதுக்கீடு சமூக நீதி அல்ல.
ஏழைகளுக்குப் பொருளாதார உதவி வழங்குவதை நாங்கள் தடுக்கவில்லை. அது பொருளாதார நீதியாகுமே தவிர, சமூக நீதியாகாது. அதனால்தான், இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை எதிர்க்கிறோம். முன்புபோல, உயர் சாதியினர் மட்டுமே படிக்கலாம் என்ற நிலையை மீண்டும் உருவாக்க முயல்கின்றனர். இதைத் தடுக்க வேண்டும்.
பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு முறையாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நீதித் துறையில் இடஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு ஆகியவையும் உறுதி செய்யப்பட வேண்டும்.மத்திய அரசு சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்தி, அந்த தரவுகளை வெளியிட வேண்டும்.
நாடு முழுவதும் கூட்டாட்சி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதியை நிலைநாட்ட அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். அது கூட்டுக் குரலாக, கூட்டணிக் குரலாக அமைய வேண்டும். எந்த ஒரு கருத்தியலும் வெற்றி பெற, அதை ஏற்றுக் கொண்ட சக்திகளின் ஒற்றுமை மிகவும் அவசியம், அந்த ஒற்றுமை அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும். அதற்கு இதுபோன்ற கூட்டமைப்புகள் அடித்தளம் அமைக்கும். சமூக நீதி, சமதர்ம, சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் இணைந்துப் போராடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிய கம்யூ. தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூ. தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதி வீரப்பமொய்லி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி டெரிக் ஓ பிரைன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, தமிழகத்தில் இருந்து திக தலைவர் வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT