Published : 03 Apr 2023 03:16 PM
Last Updated : 03 Apr 2023 03:16 PM

நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட வரைவை முன்மொழிந்திடுக: சீமான்

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "தமிழகத்தில் வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படும் கொடுமைகளைத் தடுத்திடும் வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கறிஞர்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றியுள்ளதைப் போன்று தமிழ்நாட்டிலும் ‘வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டம்’ இயற்ற நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்ட வரைவு முன்மொழியப்பட வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு முற்றாகச் சீர்குலைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லாத கொடுஞ்சூழல் நிலவுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கட்டுங்கடங்காத அளவில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளதோடு, பொதுமக்களைப் பாதுகாக்கும் காவல் துறையினர், வழக்கறிஞர் பெருமக்கள் போன்றோரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத அவலநிலை நிலவுகிறது.

குறிப்பாக ஆண் காவலர்கள் படுகொலை செய்யப்படுவது சாதாரண நிகழ்வுகளாகிவிட்ட நிலையில், பெண் காவலர்கள் மீது பாலியல் அத்துமீறல்களும், கொலைமுயற்சி நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. மேலும் சட்டத்தின் மூலம் நீதியை நிலைநாட்டி பாமர மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் வழக்கறிஞர் பெருமக்களும் படுகொலை செய்யப்படும் கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் உச்சமாகும்.

கடந்த வாரம் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்கணேஷ் படுகொலை செய்யப்பட்டார்.அதுமட்டுமன்றி கடந்த சில மாதங்களில் மட்டும் தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார், அரியலூர் வழக்கறிஞர் சாமிநாதன், தர்மபுரி வழக்கறிஞர் சிவகுமார் எனத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மக்களைக் குற்றவாளிகளிடமிருந்து காக்கும் காவலர்களுக்கும், சட்டத்தின் மூலம் நீதியைப் பெற்றுத்தரும் வழக்கறிஞர்களுக்குமே உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதிலிருந்தே ஏழை, எளிய மக்கள் எந்த அளவு பாதுகாப்பற்ற பேராபத்தானச் சூழலில் வாழ்கின்றனர் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் படுகொலைகளைக் காணும்போது தமிழ்நாட்டில் நடைபெறுவது திமுகவின் திராவிட மாடல் என்பது சமூகநீதி ஆட்சியா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா? என்ற ஐயம் மக்களிடம் எழுகிறது.

ஆகவே, இனியும் இதுபோன்று வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படும் கொடுமைகளைத் தடுத்திடும் வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கறிஞர்களைப் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றியுள்ளதைப் போன்று தமிழ்நாட்டிலும் ‘வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டம்’ இயற்ற நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சட்ட வரைவு முன்மொழியப்பட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x