Published : 03 Apr 2023 05:12 AM
Last Updated : 03 Apr 2023 05:12 AM

நிலத்துக்கு அடியில் தோண்டாமல் கடலில் இருந்து குடிநீரை எடுக்க திட்டமிட வேண்டும் - சிவதாணுப் பிள்ளை வலியுறுத்தல்

சென்னை: குடிநீருக்காக நிலத்துக்கு அடியில் தோண்டாமல், கடலிலிருந்து எடுக்கத் திட்டமிட வேண்டுமென பிரம்மோஸ் மையத்தின் நிறுவனர் சிவதாணுப் பிள்ளை வலியுறுத்தி உள்ளார்.

உலக தண்ணீர் தினத்தையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள இந்திய பொறியியல் நிறுவனத்தில் (ஐஇஐ) நேற்று முன்தினம் உச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரம்மோஸ் மையத்தின் நிறுவனர் ஏ.சிவதாணுப் பிள்ளை சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

முன்னதாக உலக தண்ணீர் தினத்தையொட்டி நடைபெற்ற அறிவியல் புராஜக்ட் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 5 கல்லூரிகள் மற்றும் 2 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இந்திய பொறியியல் நிறுவனத்தின் தலைவர் கண்ணன் பேசுகையில், ``நாம் வாழும் பூமி 71 சதவீதம் நீரால் சூழப்பட்டிருந்தாலும், அதில் 3 சதவீதம் அளவிலான தண்ணீர் மட்டுமே குடிநீராக பயன்படுகிறது. இதனால் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கும் சாத்தியக்கூறு குறைவாக உள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பு, தொழிற்சாலைகள் அதிகரிப்பு, நீர்நிலைகள் பராமரிப்பின்மை, நீர் மாசுபாடு உள்ளிட்டவற்றால் சுத்தமான குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் முழுமையாகப் பலன் கிடைக்கவில்லை. எனவே 2050-ம் ஆண்டுக்குள் உலக நாடுகள் அடைய வேண்டிய 17 நிலையான வளர்ச்சி இலக்குகளில் சுத்தமான குடிநீரும் முக்கியமான ஒன்றாக உள்ளது” என்றார்.

பிரம்மோஸ் மையத்தின் நிறுவனர் சிவதாணுப் பிள்ளை பேசும்போது, ``எதிர்காலத்தில் தண்ணீருக்காகப் போர் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே நம் குழந்தைகளுக்குத் தண்ணீரின் அவசியம் குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். நம்மிடையே நீர் ஆதாரத்துக்கான திட்டமிடல் சரியாக இல்லை. அதைச் சரிப்படுத்த வேண்டும். அதேபோல் உலக வெப்பமயமாதலும் அதிகரித்து வருகிறது. மனிதர்களால் மரங்கள் அழிக்கப்படுவதும், காலநிலை மாற்றமும்தான் இதற்குக் காரணம். இனிவரும் காலங்களில் குடிநீருக்காக நிலத்துக்கடியில் தோண்டாமல் கடலிலிருந்து குடிநீரை எடுக்கத் திட்டமிட வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் இந்திய பொறியியல் நிறுவனத்தின் செயலாளர் கே.என்.சிவராஜு, இணை செயலாளர் டி.கோகுல், சென்னை ராம்சரண் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கவுசிக் பலிசா, இந்திய பொறியியல் நிறுவனத்தின் காஞ்சிபுரம் மையம் தலைவர் டி.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x