Published : 03 Apr 2023 05:17 AM
Last Updated : 03 Apr 2023 05:17 AM

கரோனா தொற்று உறுதியானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் - அமைச்சர் அறிவுறுத்தல்

உதகை படகு இல்லத்தில் மாரத்தான் ஓட்டத்தை நேற்று தொடங்கிவைத்து பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்.

உதகை: கரோனா தொற்று உறுதியான அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் ‘உதகை 200 ஆண்டுகள்’ நிறைவை முன்னிட்டு, உதகை படகு இல்லத்தில் 90 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா பெருந்தொற்று கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக பல அலைகளை ஏற்படுத்தி மிகப் பெரிய பேரிடரையும், பாதிப்பையும் உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. கடந்த 6 முதல் 7 மாதங்களாக உலக அளவில் தொற்று இல்லாத நிலையில் இருந்தது. ஆனால் தற்போது, தொற்று அதிகரித்து உள்ளது.

குறிப்பாக இந்தியாவிலும் மீண்டும் ஒமிக்ரான் உருமாறிய தொற்று அதிகரித்துள்ளது. எக்ஸ்பிபி, பிஏ2 போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றன. உலக அளவில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு வார்டுகள்: தமிழ்நாட்டில் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் 20 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த எக்ஸ்பிபி, பிஏ2 வைரஸ் சிறிய அளவில் பாதிப்பு ஏற்படுத்துவதால், பொது மக்கள்எந்த பதற்றமும் அடைய வேண்டாம். தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதோடு, மருத்துவர்கள் ஆலோசனைகள் படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கி.பிரபாகர், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x