Published : 03 Apr 2023 04:52 AM
Last Updated : 03 Apr 2023 04:52 AM
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் நேற்று திடீரென தீ விபத்து நேரிட்டது. சுமார் 15 நிமிடங்களிலேயே தீ அணைக்கப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது.
1959-ல் 177 அடி உயரத்தில், 14 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் டிஜிட்டல் பெயர்ப் பலகைவைக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை என்பதால், இங்கு பாதுகாப்புஊழியர்கள், பராமரிப்பு ஊழியர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வழக்கம்போல மாலையில் எல்ஐசி டிஜிட்டல் பெயர்ப் பலகையின் விளக்குகளை ஊழியர்கள் ‘ஆன்’ செய்துள்ளனர். சிறிது நேரத்தில் பெயர்ப் பலகையில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. திடீரென தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சிறிது நேரத்துக்குப் பிறகே மொட்டை மாடியில் உள்ள பெயர்ப் பலகை தீப்பற்றி எரிவது ஊழியர்களுக்குத் தெரியவந்துள்ளது.
இதனால் பராமரிப்பு ஊழியர்களும், அண்ணா சாலையில் சென்றவாகன ஓட்டிகளும் அதிர்ச்சியடைந்து, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக எழும்பூர், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உயரமான இடத்தில் தீப்பற்றியதால் ‘ஸ்கை லிப்ட்’ எனப்படும் 2 ராட்சத தீயணைப்பு வாகனங்களும் அங்கு கொண்டு வரப்பட்டு, அதன் வழியாக தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் சென்றனர். அங்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து சில நிமிடங்களிலேயே தீயை அணைத்தனர்.
இதில் பெயர்ப் பலகை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. அங்குவந்த தீயணைப்புத் துறை கூடுதல் இயக்குநர் விஜய் சேகர், விபத்து நேரிட்ட பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மின் கசிவு காரணமாக எல்ஐசி கட்டிடத்தின் 14-வது மாடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகை தீப்பிடித்துள்ளது.
விபத்து குறித்து தகவல் வந்ததும், 54 மீட்டர் உயரம் வரை செல்லக்கூடிய இரு ‘ஸ்கை லிப்ட்’ தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு, அவற்றின் உதவியுடன் 15 நிமிடங்களிலேயே தீ அணைக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தடுக்கப்பட்டது. விபத்தில் பெயர்ப்பலகை மட்டுமே சேதமடைந்துள்ளது. வேறு எந்த பாதிப்பும் இல்லை.
கோடையில் இதுபோன்ற பெரிய கட்டிடங்களில் தீ விபத்துகள் நேரிட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே,உயரமான கட்டிடங்களை ஆய்வுசெய்துவருகிறோம். சென்னையில் 3 ‘ஸ்கை லிப்ட்’ வாகனங்கள் உள்ளன. மேலும், 3 வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து நெரிசல்: தீ விபத்தால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டு, போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து குறித்து அண்ணா சாலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புஅமைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் சில நாட்களுக்கு முன் பழுது ஏற்பட்டுள்ளது. அதை ஊழியர்கள் சரி செய்துள்ளனர். அதை அகற்றிவிட்டு புதிய பெயர்ப் பலகை அமைக்க எல்ஐசி நிர்வாகம் ஆலோசித்து வந்த நிலையில், தீ விபத்து நேரிட்டுள்ளது. எல்ஐசி கட்டிடத்தில் 1975, 2012-ல் ஏற்கனவே தீவிபத்து நேரிட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு 3-வது முறையாகதற்போது தீ விபத்து நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT