Published : 03 Apr 2023 05:45 AM
Last Updated : 03 Apr 2023 05:45 AM

பாஜக-அதிமுக கூட்டணி கல்லில் எழுதப்பட்டது கிடையாது - அண்ணாமலை கருத்து

சென்னை: பாஜக-அதிமுக கூட்டணி என்பது கல்லில் எழுதப்பட்டது கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கனா சபாவில் சென்னை இலக்கிய விழா மூன்றாம் ஆண்டு பதிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கலந்து கொண்டு, ‘பாரதியாரின் கவிதைகளும், அறிவியலும்’ என்ற தலைப்பில் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா சொன்ன கருத்துகளை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். கூட்டணி என்பது பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அது எப்படி இருந்தாலும், அதில் பாஜகவின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதில் மாநில தலைவராக நான் தெளிவாக இருக்கிறேன்.

அதிமுக-பாஜக கூட்டணியில் இல்லை என்று நான் எப்போதும் கூறியது கிடையாது. இன்றைக்கும் அதிமுகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம். மேலும், பாஜக தனித்து போட்டியிடும் என்றும் நான் பொதுவெளியில் ஒருபோதும் கூறியது கிடையாது. அமித்ஷாவுடனான சந்திப்பின்போது, கூட்டணி குறித்து நான் என்ன கூறினேனோ, அதேதான் அமித்ஷாவும் தெரிவித்தார். தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளது. கூட்டணிக்கான இடங்கள் தேர்வு, அதில் எத்தனை இடங்கள் பாஜகவுக்கு அதிமுக வழங்கும், பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான கொள்கை, பாஜக எங்கே போட்டியிட வேண்டும், எந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் உள்ளது. இதைப்பொருத்துதான் கூட்டணி அமையும். எனவே, அமித் ஷா கூறிய பொருளை புரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக-அதிமுக கூட்டணி என்பது கல்லில் எழுதப்பட்டது கிடையாது. அதனால், கூட்டணி தொடர்பாக மாநில தலைவராக என்னுடைய கருத்தை கூறியிருக்கிறேன். நான் பணம் இல்லாத ‘தூய்மையான அரசியல்’ பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். இது 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் எதிரொலிக்க வேண்டும் என்பது எனது கருத்து. கட்சி வலிமையாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அதேபோல், 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெரும் அளவுக்கு வேட்பாளர்கள் இருக்க வேண்டும். மக்களிடம் அந்த நம்பிக்கை இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். தமிழகத்தில் தென்காசி, ராமநாதபுரம், கொங்கு பகுதிகளில் பாஜக வளர்ந்து வருகிறது.

பாஜகவும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறோம். அதை முறையாக செய்யுங்கள் என்றுதான் அரசை வலியுறுத்துகிறோம். ஏப்ரல் 14-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும். அப்போது ஊழல் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் சென்னை வருகிறார். ஒவ்வொரு முறையும் பிரதமர் சென்னை வரும்போது, பாஜக வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x