Published : 03 Apr 2023 06:18 AM
Last Updated : 03 Apr 2023 06:18 AM

கேரளத்தில் இருந்து வேளாங்கண்ணி வந்தபோது ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்

தஞ்சாவூர்: கேரளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வழிபாட்டுக்கு வந்தபோது, தஞ்சாவூர் அருகே ஆம்னி பேருந்து சாலையோரம் கவிழ்ந்ததில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு 51 பேருடன் நேற்று முன்தினம் ஆம்னி பேருந்து புறப்பட்டது. பேருந்தை சமீர் என்பவர் ஓட்டினார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயு உள்ள ஒக்கநாடு கீழையூர் பகுதியில் நேற்று அதிகாலை வந்தபோதுசாலை வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில், திருச்சூர் அருகேயுள்ள நெல்லிக்குன்னம் பகுதியைச் சேர்ந்த லில்லி(63), ஜெரால்டு (9) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து தீயணைப்புத் துறையினர், போலீஸார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். இவர்களில் 32 பேர் மன்னார்குடி அரசுமருத்துவமனையிலும், 8 பேர் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா, இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் விபத்து நேரிட்ட பகுதியைப் பார்வையிட்டனர். இந்த விபத்து காரணமாக ஒரத்தநாடு- மன்னார்குடி சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முதல்வர் நிவாரணம் அறிவிப்பு: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x