Published : 02 Apr 2023 02:45 PM
Last Updated : 02 Apr 2023 02:45 PM
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி வலிமையாக இருப்பதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் என்றும் அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சென்னையில் இன்று (ஏப்.2) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அகில இந்திய அளவில் 150 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. கடந்த முறை வெற்றி பெறாத அதேநேரத்தில் வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள தொகுதிகளாக இந்த தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 150 தொகுதிகளில் தமிழகத்தில் தென் சென்னை உள்பட 9 நாடாளுமன்றத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக தென் சென்னையில் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட கட்சி கட்டமைப்பு தொடர்பாக ஆலோசிக்க தென் சென்னை பாஜக பொறுப்பாளர்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசித்தோம்.
அதிமுக - பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை சொல்லவில்லை. அதிமுகவுடன்தான் கூட்டணி என அமித் ஷா கூறி இருக்கிறார். அண்ணாமலையும் கூறி இருக்கிறார். நானும் தொடர்ந்து கூறி வருகிறேன். அதிமுக தலைமையும் கூறி வருகிறது. எனவே, கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், இதுபோன்ற சலசலப்புகள் திமுக கூட்டணியிலும் இருக்கின்றன. ஆனால், பத்திரிகையாளர்கள் திமுக தரப்பிடம் இதுபோன்ற கேள்விகளை கேட்பதில்லை. நீங்கள் அவர்களிடமும் கேள்வி கேட்க வேண்டும்.
வரும் 8ம் தேதி தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். அப்போது, பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் பல்வேறு பணிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, விமான நிலைய விரிவாக்கத் திட்டம், சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள், தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் என பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை மத்திய அரசு தமிழகத்திற்குக் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ. 6 ஆயிரம் கோடி நிதி தமிழக ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுத்துள்ளது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT