Published : 02 Apr 2023 04:19 AM
Last Updated : 02 Apr 2023 04:19 AM
சென்னை: தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பான கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், அவற்றைப் பரிசீலிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, “ஆரணியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா?” என்று அதிமுக உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
அதேபோல, “கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படுமா?” என்று திருவிடைமருதூர் உறுப்பினரும், அரசு கொறடாவுமான கோவி.செழியன் கேள்வி எழுப்பினார்.
இவற்றுக்குப் பதில் அளித்து வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுதவிர, வருவாய்க் கோட்டம், வட்டங்களைப் பிரிப்பது குறித்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.
புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக நிதிநிலை அடிப்படையில் பரிசீலித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய முடிவெடுத்து அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
தொழிலாளர் குடியிருப்பு: இதேபோல, கேள்வி நேரத்தின்போது வீட்டுவசதித் துறை தொடர்பாக வேப்பனபள்ளி தொகுதி அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார். அவர், “வேப்பனபள்ளி தொகுதியில் சிப்காட் இடத்தைப் பெற்று, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘‘ஏற்கெனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், குறிப்பிட்ட அளவுக்கு காலியாகத்தான் உள்ளன. எனினும், சிப்காட்டுக்கு இடம் தேர்வு செய்யும்போது, தொழிலாளர் குடியிருப்புகளுக்கும் சேர்த்து இடம் தேர்வு செய்வது தொடர்பாக, தொழில் துறையுடன் சேர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT