Published : 02 Apr 2023 04:28 AM
Last Updated : 02 Apr 2023 04:28 AM
சென்னை: நாட்டின் சமூகநீதிக்கு வழிகாட்டியது வைக்கம் போராட்டம் என்று கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நேற்று `வைக்கம் சத்தியாகிரகப் போராட்ட நூற்றாண்டு விழா' நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து கொச்சி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, கேரள தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவி, மாவட்ட ஆட்சியர் எஸ்.கே.உமேஷ், திமுக கேரள மாநிலச் செயலாளர் முருகேஷ், தலைவர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர். முதல்வருடன் டி.ஆர்.பாலு எம்.பி.யும் சென்றிருந்தார்.
தொடர்ந்து, கோட்டயம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள குமரகத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துப் பேசினார். மாலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடம் சென்று, அங்குள்ள பெரியார் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல, வைக்கத்தில் உள்ள எம்ஜிஆர், ஜானகி அம்மாள் சிலைகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், வைக்கம் போராட்ட வீரர்கள் டி.கே.மாதவன், மன்னத்து பத்மநாபன் உள்ளிட்டோரது சிலைகளுக்கும், வைக்கம் நினைவுத் தூணுக்கும் முதல்வர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வைக்கம் இப்போது கேரளாவில் இருந்தாலும், தமிழகத்துக்கு எழுச்சி உணர்வை ஏற்படுத்திய ஊராகும். கடந்த 1924-ம் ஆண்டு வைக்கத்தில் நடைபெற்ற போராட்டம் என்பது, கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மகத்தான இடம் பிடித்த போராட்டமாகும். அதுமட்டுமின்றி, நாட்டின் சமூகநீதிக்கு வழிகாட்டியப் போராட்டம் இதுவாகும்.
இந்தப் போராட்டத்தின் தூண்டுதலால்தான், தீண்டாமைக்கு எதிரானப் போராட்டங்களில் மகாத்மா காந்தி அதிக கவனம் செலுத்தினார்.
1924-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி வைக்கம் கோயில் தெருவில் நுழையும் சத்தியாகிரகப் போராட்டத்தில் பெரியார் மட்டுமல்ல, தமிழகத்தில் இருந்து ஏராளமான தியாகிகள் சென்றுப் போராடினர். போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் கழித்தும், தமிழகத்தை மறக்காமல், நூற்றாண்டு விழாவுக்கு எங்களை அழைத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
தமிழகம், கேரள மாநிலத் தலைவர்கள் சேர்ந்து போராடிய வைக்கம் போராட்டத்துக்கு கிடைத்தவெற்றியை தற்போது நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக, பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று நான் தெரிவித்தேன்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பழ.அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ நூலின் மலையாள மொழிபெயர்ப்பு தற்போது வெளியிடப்படுகிறது. பெரியார் நினைவகத்தைச் சீரமைக்க ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அருவிக்குத்து சிறை வளாகத்தில், புதிய நினைவகம் அமைக்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான முறையான அனுமதிக் கடிதத்தை கேரள அரசுக்கு அனுப்புவோம்.
பெரியார் தமிழகத்தில் பிறந்திருந்தாலும், அவர் உலகம் முழுவதற்குமான தலைவர். அவர் முன்மொழிந்த கொள்கைகள், அனைத்து நாடுகளுக்கும், மக்கள் அனைவருக்கும் பொதுவானவை. சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம், மானுடப்பற்று, ரத்தபேதமின்மை, பால் பேதமின்மை, சுய முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி, மதச்சார்பற்ற அரசியல், அறிவியல் மனப்பான்மை ஆகியவைதான் பெரியாரியத்தின் அடிப்படைக் கூறுகளாகும். உலகம் முழுமைக்குமான இந்தக் கருத்தியல்களை வென்றெடுக்க நாம் அனைவரும் உழைத்தாக வேண்டும்.
பல்வேறு போராட்டங்கள் மூலமாக சனாதனக் காலத்தைக் கடந்து வந்துள்ளோம் என்பதை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் பணியை இரு மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும். சனாதன, வர்ணாசிரம, சாதியவாத, மதவாத சக்திகள் மீண்டும் கோலோச்ச நினைக்கும் காலத்தில் நமக்கு இந்தக் கடமை அதிகம் உள்ளது. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்ஒற்றுமையுடன் போராடி வென்றதுபோல, தற்போதும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மாநிலங்களின் சகோதரத்துவம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: வைக்கம்போராட்டத்தில் தமிழகத் தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு விழாவில் நானும், தமிழக முதல்வரும் பங்கேற்று, இந்த விழாவை இணைந்து நடத்த முடிவெடுத்தோம். இனி அனைத்து விஷயங்களிலும், இரு மாநிலங்களும் சகோதரத்துவத்துடன் செயல்படுவோம். இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்வோம்.
இரு மாநில அரசுகளும் சமூகநீதியைப் பாதுகாப்பதுடன், தீண்டாமைக்கு எதிராகவும் செயல்படுகின்றன. தமிழக அரசு பெரியார், அண்ணாவைப் பின்பற்றி செயல்படுகிறது. கேரளாவிலும் மதச் சார்பற்ற அரசு நடக்கிறது. இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.
விழாவில், மார்க்சிய கம்யூ.மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் கேரள அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, 80 பேருந்துகளில் நூற்றுக்கணக்கானோர் கேரளா சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT