Last Updated : 21 Sep, 2017 07:38 AM

 

Published : 21 Sep 2017 07:38 AM
Last Updated : 21 Sep 2017 07:38 AM

உர விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ஆன்லைன் ரசீது: நவம்பர் 1-ம் தேதி முதல் கட்டாயமாகிறது

உர விற்பனையில் அனைத்து நிலைகளிலும் முறைகேட்டைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 11,300 கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் ஆன்-லைனில் நவீன கருவி மூலம் ரசீது வழங்குவது கட்டாயமாகிறது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் மானியம் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம், 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவற்றில் பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. அதுபோல உர மானியம் பெற விவசாயிகளுக்கு ஆதார் அட்டை கடந்த ஜூன் மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

7 ஆயிரம் கருவிகள்

இந்நிலையில், உர விற்பனையில் அனைத்து நிலைகளிலும் முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் 4,300 தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் உரம் விற்பனை செய்யப்படுகிறது. உர விற்பனையில் முறைகேட்டைத் தடுக்க “பாயின்ட் ஆப் சேல் டிவைஸ்” என்ற விற்பனைக் கருவியை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இதுவரை சுமார் 7 ஆயிரம் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கருவிகளும் விரைவில் கொடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்தபடியாக உர மானியத்துக்காக ஆண்டுக்கு ரூ.74 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்குகிறது. உர விற்பனையில் அனைத்து நிலைகளிலும் முறைகேட்டைத் தடுப்பதன் மூலம் இந்த தொகையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, உரம் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து விவசாயிகள் வரை அனைத்து நிலைகளிலும் முறைகேட்டைத் தடுப்பதற்காக ஆன்-லைன் மூலம் ரசீது வழங்கும் புதிய முறையை வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதற்காக பிரத்யேகமாக மென்பொருள் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. உர ஆலைகளில் உற்பத்தியாகும் உரங்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் மூலமாகமும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (டான்பெட்) வழியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும் விவசாயிகளுக்கு விற்கப்படுகின்றன.

உர ஆலைகளில் இருந்து உரங்கள் மொத்த விற்பனையாளருக்கு செல்லும்போது மேற்குறிப்பிட்ட பிரத்யேக மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படும். அவை மொத்த விற்பனையாளர் கிடங்குகளுக்குச் சென்றதும் அதைப் பெற்றுக் கொண்டதை உறுதி செய்யும் வகையில் அவர்கள் அந்த மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதுபோல சில்லரை விற்பனையாளர்களும் செய்ய வேண்டும். பின்னர் ஒவ்வொரு சில்லரை விற்பனையாளரும் விவசாயிகளுக்கு உரம் விற்கும்போது அவரிடம் உள்ள இருப்பு குறைவது உள்ளிட்ட தகவல்கள் அந்த மென்பொருளில் தானாகவே பதிவாகிவிடும்.

தீவிர கண்காணிப்பு

இதனால் எந்த மாநிலத்தில் எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் உள்ள உர விற்பனையகத்தில் எவ்வளவு உரம் இருப்பு உள்ளது உள்ளிட்ட விவரங்களை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இருந்த இடத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். இதனால் உரம் கடத்தப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். ஒரு இடத்தில் ரசீது போட்டுவிட்டு வேறொரு இடத்துக்கு உரம் செல்வது போன்ற முறைகேடுகள் தடுக்கப்படும்.

முன்பெல்லாம் ஒரு மாவட்டத்துக்கு உரங்கள் போய்ச் சேர்ந்துவிட்டாலே அதற்கான மானியத் தொகை உர ஆலைகளுக்கு வழங்கப்பட்டுவிடும். இப்புதிய முறையில் விவசாயிகளுக்கு உரங்கள் விற்றபிறகுதான் அதற்குரிய மானியத் தொகை உர ஆலைகளுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x