Published : 01 Apr 2023 11:11 PM
Last Updated : 01 Apr 2023 11:11 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் கே.ஜி.பிரகாஷ் வரவேற்றார். கல்லூரி செயலர் எஸ்.சிங்கராஜ் கல்லூரியில் 50 ஆண்டுகால செயல்பாடு குறித்த அறிக்கையை வாசித்தார்.
பளையபாளையம் இராஜுக்கள் மகமை பொதுபண்டு தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, ராம்கோ குழும தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். பொன்விழா அறிவியல் வளாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ‘‘ராஜபாளையத்தை சேர்ந்த எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். மகாகவி பாரதியார் பாரத மாதாவை வாழ்த்தி ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்தியாவை ‘வேதமுடையதிந்த நாடு, நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு’ என்று குறிப்பிடுகிறார்.
ராஜபாளையம் தொழில் வளர்ச்சியில் முன்னோடி நகராக உள்ளது. வளர்ந்த நாடுகள் அனைத்தும் தொழில்துறையில் முன்னேறி உள்ளது. உலகிலேயே அதிக மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. பொருளாதார வளர்ச்சி, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், குடிநீர் இணைப்ப வழங்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலைகள் என கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் காசியில் இருந்து ராமேஸ்வரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆண்டுதோறும் பயணித்து வந்தனர். அவர்கள் வழியில் பல்வேறு சத்திரங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது. எனது பாட்டி பாட்னாவில் இருந்து பல மாதங்கள் பயணித்து ராமேஸ்வரம், காசி, பூரி என பல்வேறு தலங்களுக்கு யாத்திரை சென்றார். இந்தியாவின் தனித்துவமே ஆன்மிகம் தான்.
இந்தியா என்பது எந்த ராஜாவாலும் அரசராலும் உருவாக்கப்பட்டது அல்ல. ஐரோப்பிய யூனியன் பல நாடுகள் சேர்ந்து உருவாக்கப்பட்டது. வன்முறையாலும், ஆக்கிரமிப்பாலும் பல நாடுகள் தங்களை உருவாக்கி கொண்டன. ஆனால் இந்தியா ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. இங்கு பல ஆயிரம் ஆண்டுகளாக வேத உபநிடதங்கள் பின்பற்றபட்டு வருகிறது. தமிழகம் ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் வளர்க்கப்பட்ட பூமி.
இந்தியா ஒரு குடும்பம்: கல்லூரி விழாவுக்கு வந்தவர்கள் நாங்கள் ஆந்திராவில் இருந்து புலம்பெயர்ந்து வந்ததாக தெரிவித்தனர். காசியில் பல நூறு ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களை புலம் பெயர்ந்தவர்கள் என கூறுவதில்லை. இந்திய சுதந்திரப் போராட்டம் தமிழ்நாடு உட்பட நாட்டின் அனைத்து மூலைகளிலும் நடைபெற்றது. ஆங்கிலேயர்கள் தான் நம்மை பிரித்து வைத்துள்ளனர். இந்தியா என்பது ஒரு குடும்பம். நாம் ஆன்மீகத்தாலும், காலச்சாரத்தாலும் இணைந்தவர்கள்.
2016-ம் ஆண்டு புவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் என்ற கொள்கையை இந்தியா முன்னெடுத்த போது ஒரு சில நாடுகளே ஆதரவு தெரிவித்தன. ஆனால் இன்று 120க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவின் பின்னால் நிற்கின்றன. இந்தியாவில் 40% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. 20 சதவீதம் கார்பன் இல்லாத பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது.
பிறருக்கு உதவுவது இந்தியாவின் மரபணுவில் உள்ளது: கரோனா ஊரடங்கு காலத்தில் நமது விஞ்ஞானிகள் தடுப்பூசியை கண்டறிந்து நம்மை காப்பாற்றினர். இந்தாயிவின் தடுப்பூசி கரோனாவை கட்டுபடுத்தாது என பலர் கிண்டல் செய்தனர். நாம் கரோனா தொற்றை சிறப்பாக கையாண்டு அதிலிருந்து மீண்டோம். அதோடு நின்றுவிடாமல் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவி செய்தோம். இதுதான் நம் தேசம். பிறருக்கு உதவுவது என்பது இந்தியர்களின் மரபணுவில் உள்ளது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான் இந்தியா.
ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்த அமைப்பு ஐரோப்பிய யூனியனை விட பலமானது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் 220 இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த காலத்தில் ராணுவத்தில் மருத்துவ பிரிவில் மட்டுமே பெண்கள் பணியாற்றி வந்தனர். இன்று இந்தியாவின் மகள்கள் போர் விமானத்தை இயக்கி வருகின்றனர். பல துறைகளில் ஆண்களை விட பெண்கள் சிறப்பாக பணியாற்றி முதலிடம் பெற்றுள்ளனர்.
இந்த கல்லூரி 75-வது ஆண்டு விழா கொண்டாடும்போது இந்தியா 100-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும். சுவாமி விவேகானந்தர் நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவை வலிமையாக மாற்றுகிறேன் என்றார். 2047-ல் இந்தியாவை வல்லரசாகவும், தன்னிறைவு பெற்ற நாடாகவும், உலகின் குருவாகவும் மாறுவதற்கும் இளைஞர்கள் செயலாற்ற வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...