Published : 01 Apr 2023 07:18 PM
Last Updated : 01 Apr 2023 07:18 PM

“மீண்டும் கோலோச்ச நினைக்கும் சனாதன, சாதிய, மதவாத சக்திகள்...” - வைக்கம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கேரளாவில் நடந்த வைக்கம் சத்யாகிரக நூற்றாண்டு விழாவில் பேசும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கேரளா: "எத்தகைய சனாதனக் காலத்தை பல்வேறு போராட்டங்களின் மூலமாக நாம் கடந்து வந்துள்ளோம் என்பதை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் பணியை தமிழக, கேரள மாநில அரசுகள் செய்தாக வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது: "1924-ஆம் ஆண்டு வைக்கத்தில் நடந்த போராட்டம் என்பது, கேரளத்தின் சமூக நீதி வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம். இன்னும் சொன்னால் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்."வைக்கம் போராட்டம்தான் மகர் போராட்டத்தை நடத்துவதற்கு எனக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தது" என்று அண்ணல் அம்பேத்கர் பிற்காலத்தில் எழுதினார்கள். வைக்கம் போராட்டத்தின் தூண்டுதலால்தான் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் அண்ணல் காந்தியடிகள் அதிகம் கவனம் செலுத்தினார்கள்.

தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோட்டிலும் சுசீந்திரத்திலும், திருவண்ணாமலையிலும், மதுரையிலும், திருச்சியிலும், மயிலாடுதுறையிலும் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம்தான். எனவே சுயமரியாதை, சமூகநீதிப் போராட்டத்தின் தொடக்கமான வைக்கம் மண்ணில் நிற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். வெற்றிப் பெருமிதத்துடன் நான் இங்கே கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன்.

அந்த வகையில் 100 ஆண்டுகள் கழித்தும் தமிழ்நாட்டை மறக்காமல் எங்களை அழைத்துள்ளார் கேரள மாநிலத்தினுடைய முதல்வர் பினராயி விஜயன். வைக்கம் பொன் விழாவானது 1975-ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தலைமையில் நடந்தது. திராவிடர் கழகத்தினுடைய தலைவர் அன்னை மணியம்மையாரும் - திராவிடர் கழகத்தினுடைய பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணியும் வந்து அந்த நிகழ்ச்சியிலே பங்கேற்றார். 1985-ஆம் ஆண்டு பெரியாருக்கு வைக்கத்தில் நினைவுச் சின்னம் அமைக்க அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. 3.11.1985 அன்று நடந்த விழாவில், அன்றைக்கு தமிழ்நாட்டினுடைய நிதி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனும் - கேரள வருவாய்த் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப்பும் கலந்து கொண்டார்கள்.

தந்தை பெரியாரின் புரட்சி மொழிகள் அந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு அப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த விழாவை ஏற்பாடு செய்திருப்பது மிகமிக பொருத்தமானது. தமிழ்நாடு - கேரள தலைவர்கள் சேர்ந்து போராடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தந்தை பெரியார், டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், கேளப்பன், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, மன்னத்து பத்மநாபன், கோவை அய்யாமுத்து, எம்பெருமாள் நாயுடு, காந்திராமன், தாணுமாலையப் பெருமாள் போன்ற தியாகிகளை இந்த நாட்டு மக்களுக்கு மீண்டும் நாம் அறிமுகம் செய்தாக வேண்டும். அவர்களது உணர்வை நம் மாநிலத்து மக்கள் பெற்றாக வேண்டும்.

நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் விதி எண் 110-இன் கீழ் அறிக்கை ஒன்றை நான் அளித்தேன். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசின் சார்பில் செய்ய இருப்பதாக நான் சொல்லி இருக்கிறேன்.பெரியார் நினைவகம் சீரமைக்க 8 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது. பெரியார் சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து சிறை வளாகத்தில் புதிய நினைவகம் அமைக்கவும் தமிழ்நாடு அரசு நினைக்கிறது. உரிய முறையான அனுமதிக் கடிதத்தை கேரள அரசுக்கு நாங்கள் விரைவில் அனுப்பி வைப்போம்.

தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால் தந்தை பெரியார் தமிழர்களுக்கு மட்டுமான தலைவர் அல்ல. இந்தியாவுக்கு மட்டுமான தலைவர் அல்ல. உலகம் முழுமைக்குமான தலைவர்தான் தந்தை பெரியார். அவர் முன்மொழிந்த கொள்கைகள் அனைத்தும் அனைத்து நாட்டுக்கும் - அனைத்து மக்களுக்கும் பொதுவான சிந்தனைகள்.எனக்கு எந்தப் பற்றும் இல்லை, மனிதப் பற்று மட்டுமே உண்டு என்று சொன்னவர் தந்தை பெரியார். சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம், மானுடப்பற்று, ரத்த பேதமில்லை,பால் பேதமில்லை, சுய முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி, மதசார்பற்ற அரசியல், அறிவியல் மனப்பான்மை இவைதான் பெரியாரியத்தின் அடிப்படை. இவை உலகம் முழுமைக்குமான கருத்தியல்கள்தான். இந்த கருத்தியல்களை வென்றெடுக்க நாம் அனைவரும் உழைத்தாக வேண்டும்.

எத்தகைய சனாதனக் காலத்தை பல்வேறு போராட்டங்களின் மூலமாக நாம் கடந்து வந்துள்ளோம் என்பதை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் பணியை இரு மாநில அரசுகளும் செய்தாக வேண்டும். மீண்டும் சனாதன - வர்ணாசிரம - சாதியவாத - மதவாத சக்திகள் கோலோச்ச நினைக்கும் காலத்தில் நமக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. இதற்கு பெரியார் என்ற பெருவிளக்கு நமக்குப் பயன்படும். வைக்கம் போராட்டம் கலங்கரை விளக்காக அமையும். 100 ஆண்டுகளுக்கு முன்னால் எத்தகைய ஒற்றுமையுடன் போராடி வென்றோமோ அதேபோன்ற ஒற்றுமையுடன் செயல்படுவோம்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x