Published : 01 Apr 2023 03:44 PM
Last Updated : 01 Apr 2023 03:44 PM
சென்னை: 2022-2023-ம் ஆண்டில், சுமார் 11.4 லட்சம் விண்ணப்பதாரர்கள், பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுச் சேவையின் மூலம் தேர்வு எழுதியுள்ளனர் என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையானது, "கணினி அடிப்படையிலான இணையவழி தேர்வை ஒரு சேவையாக" வழங்குகிறது. இச்சேவை பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவான மற்றும் வெளிப்படையான, இடையூறில்லாத பாதுகாப்பான முறையில் குறித்த கால அளவில் நிரப்ப பயன்படுகிறது.
மேலும், தமிழ்நாடு மின்-ஆளுமை முகமையானது, M/s.NSEIT என்ற நிறுவனத்தை அனைத்து அரசுத் துறைகளும் இணைய வழியில் தேர்வு நடத்துவதற்கு, வரையறுக்கப்பட்ட விலை மதிப்பு ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தும் பங்குதாரராக தெரிவு செய்துள்ளது. இணையவழித் தேர்வு சேவையானது, தேர்வுக்கு முந்தைய செயல்முறை, தேர்வு செயல்முறை, தேர்வுக்குப் பிந்தைய செயல்முறை ஆகிய மூன்று செயல்முறைகளை உள்ளடக்கியுள்ளது.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழங்கும் இச்சேவையைப் பயன்படுத்தி 2022-2023ம் நிதி ஆண்டில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (MRB), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் (MHC) ஆகிய ஆறு துறைகளுக்கான, 492 காலிப்பணியிடங்கள் பாதுகாப்பான மற்றும் எளிய முறையில் வெற்றிகரமாக நிரப்பப்பட்டுள்ளன.
2022-2023ம் ஆண்டில், சுமார் 11.4 லட்சம் விண்ணப்பதாரர்கள் இந்த இணையவழித் தேர்வுச் சேவையின் மூலம் தேர்வு எழுதியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT