Published : 01 Apr 2023 06:02 AM
Last Updated : 01 Apr 2023 06:02 AM
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 2.45 லட்சம்பேர் பயணம் செய்கின்றனர். அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகளைக் கூடுதலாக நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்ட்ரல் மெட்ரோரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 நகரும்படிக்கட்டுகள் பொதுத்தளத்திலிருந்து நடைமேடை 1 மற்றும் 2-க்கு சென்றுவர நேற்று திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
மேலும், சென்ட்ரல், வடபழனி, எழும்பூர், கோயம்பேடு புறநகர் பேருந்துநிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையும் நேற்று திறக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்ராஜேஷ் சதுர்வேதி இவற்றைத் திறந்து வைத்தார்.
இவை தவிர, விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் மெட்ரோ ரயில்களின் வெளிப்புறத்தை சுத்தம்செய்வதற்கான தானியங்கி ஆலைதிறக்கப்பட்டுள்ளது. மெட்ரோரயில்களின் தினசரி செயல்பாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் ரயில்களை விரைவாக இதன்மூலம் சுத்தம் செய்ய முடியும்.
இதில் மெட்ரோ ரயில்களை சுத்தம் செய்ய சோப்பு கரைசல், உயர் அழுத்த நீர் ஜெட் மற்றும்சுழலும் தூரிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பல நிலைகளில் மெட்ரோ ரயில் பெட்டிகளின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கிறது. இதில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் தானியங்கி ரயில் கழுவும் ஆலைக்குள் நுழைந்தவுடன் சுத்தம் செய்யத் தொடங்கிவிடும்.
4 பெட்டிகளைக் கொண்ட ஒரு மெட்ரோ ரயிலைச் சுத்தம் செய்வதற்கு, 2 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதில்1,600 லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மெட்ரோ ரயிலைச் சுத்தம் செய்வதற்கு தோராயமாக 10 நிமிடங்கள் ஆகும்.
மேலும், விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் நிறுவப்பட்டுள்ள மொபைல் லிஃப்டிங் ஜாக், மெட்ரோரயில்களைத் தரைமட்டத்திலிருந்து உயரத்தில் தூக்கிப் பராமரிப்பதற்கு ஓர் இன்றியமையாத உபகரணமாகும். மெட்ரோ ரயில் பெட்டிகளை அகற்றுவதற்கும், ரயில் பெட்டிகளின் அடியில் உள்ள உபகரணங்களை அகற்றுவதற்கும் மாற்றுவதற்கும் இந்த லிஃப்டிங் ஜாக் பயன்படுத்தப்படுகிறது. இந்தமொபைல் லிஃப்டிங் ஜாக் வசதியும் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர் வண்டி மற்றும் இயக்கம்), கூடுதல் பொது மேலாளர் எஸ்.சதீஷ் பிரபு (தொடர் வண்டி மற்றும் இயக்கம்), உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT