Published : 01 Apr 2023 06:08 AM
Last Updated : 01 Apr 2023 06:08 AM

சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இந்தி வார்த்தை அழிப்பு: ரயில்வே போலீஸார் விசாரணை

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையில் இந்தி வார்த்தை அழிக்கப்பட்டது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினிநிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என்ற இந்தி வார்த்தையை அச்சிடவேண்டும் என்றும், அந்தந்தமாநில மொழி வார்த்தைகளை அடைப்புக் குறிக்குள் பயன்படுத்தலாம் எனவும் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

இது தென் மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர். கடும் எதிர்ப்பால் தனது உத்தரவை மத்திய உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு ஆணையம் திரும்பப் பெற்றது.

இந்நிலையில், சென்னை கோட்டை புறநகர் ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையில், தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயர்களில், இந்திவார்த்தையை மட்டும் அடையாளம் தெரியாத நபர்கள்கருப்பு மையால் அழித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கடற்கரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், ரயில்வே துறைக்குச் சொந்தமான பெயர்ப் பலகையை சேதப்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பறக்கும் ரயில் செல்லும் சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே உள்ள வழித்தடத்தின் 5-வது நடைமேடையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x