Published : 31 Mar 2023 07:56 PM
Last Updated : 31 Mar 2023 07:56 PM
சென்னை: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார்கள் தொடர்பாக மாணவிகளிடம் நடத்திய விசாரணை மற்றும் அவர்கள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து வரும் திங்கள்கிழமை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக கூறியும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவிகளிடம் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "12 மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியிருக்கிறோம். மாணவிகள் அளித்த வாக்குமூலங்களின்படி அறிக்கை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அந்த அறிக்கையை வரும் திங்கள்கிழமையன்றே கொடுக்கப்படும். அதன்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை மகளிர் ஆணையம் செய்யும்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜூம் செயலி மூலம் ஒரு 5 மாணவிகளிடமும், நேரில் 12 மாணவிகளிடமும் விசாரணை செய்துள்ளேன். மாணவிகள் தெரிவித்துள்ள புகார்கள் குறித்து அறிக்கையில்தான் கூற முடியும். புகார் அளித்துள்ளவர்கள் கல்லூரி மாணவிகள், எனவே அதை வெளியில் சொல்லக்கூடாது. என்மீது நம்பிக்கை வைத்து அவர்கள் கூறியுள்ள புகார்கள் அரசிடம் சமர்ப்பிக்கும் அறிக்கையில் நிச்சயம் இடம்பெறும்.
இந்த சம்பவம் குறித்து இரண்டு விதமன புகார்கள் வந்தன. ஒவ்வொரு மாணவியும் ஒவ்வொரு வகையான புகார்களை தெரிவித்துள்ளனர். மேலும் எண்ணற்ற மாணவிகள் எழுத்துப்பூர்வமான புகார்களையும் என்னிடம் கொடுத்துள்ளனர். 4 பேர் மீது மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர், மற்ற விவரங்கள், அரசிடம் சமர்ப்பிக்கும் அறிக்கையில் இடம்பெறும்" என்று அவர் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் விளக்கம்: முன்னதாக, சென்னை கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பல்வேறு உறுப்பினர்கள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தைப் பொறுத்த வரையில், தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது. இது குறித்து கலாஷேத்ரா இயக்குநர் டிஜிபியை சந்தித்து பாலியல் புகார் எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.
பின்பு தேசிய மகளிர் ஆணையமே, இந்த வழக்கை முடித்து வைத்துவிட்டோம் என்று தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்பின்னர் தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது காவல் துறை தங்களுடன் வரத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் துறைக்கு இதுவரை எழுத்துபூர்வ புகார் எதுவும் வரவில்லை. இந்த விவகாரத்தைப் பொறுத்த வரையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
காவல் நிலையத்தில் முன்னாள் மாணவி புகார்: இந்ந விவகாரம் தொடர்பாக காவல்துறையில் இதுவரை புகார் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து முன்னாள் மாணவி ஒருவர், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) புகார் அளித்துள்ளார். கடந்த 2015-19 வரை படித்த அந்த மாணவி, இளங்கலை படிப்பில் படித்தபோது குறிப்பிட்ட ஒரு ஆசிரியர் ஹிரி பத்மன் என்ற ஆசிரியர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இதனால்தான் கலாஷேத்ராவில் தனது முதுநிலை படிப்பை தொடரவில்லை என்றும் அந்த மாணவி தெரிவித்துள்ளார். முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT