Published : 31 Mar 2023 08:10 PM
Last Updated : 31 Mar 2023 08:10 PM

87,000 ஓய்வூதியர்களுக்கு 90 மாத பஞ்சப்படியை வழங்கிடுக: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: 87,000 ஓய்வூதியர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்படாமல் அதன் பின்னரும் தொடரும் 90 மாதங்களுக்கான பஞ்சப்படியை வழங்கிட வேண்டும் என்று கோரி, முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ''தங்களை 7.1.2023 அன்று நேரடியாக சந்தித்து போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பலன்கள் மற்றும் பஞ்சப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம். விருப்ப ஓய்வுபெற்ற, பணியின்போது மரணமடைந்த ஊழியர்களுக்கு பணிக்கால பலன்களை வழங்கியமைக்கும், 30.03.2023 அன்று சட்டமன்றத்தில், 2022 நவம்பர் மாதம் வரை ஓய்வுபெற்றவர்களுக்கு அனைத்து ஓய்வூதிய பலன்களையும் அளிக்க ரூ.1,031 கோடி வழங்கப்படும் என்ற தங்களது அறிவிப்பை வரவேற்பதோடு, நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆயிரக்கணக்கான ஓய்வூதியர் குடும்பங்களுக்கும் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், 87,000 ஓய்வூதியர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்படாமல் அதன் பின்னரும் தொடரும் 90 மாதங்களுக்கான பஞ்சப்படியை வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். முதல்வர் ஓய்வூதியப் பலன்களை போலவே, பஞ்சப்படி நிலுவைக்கான அறிவிப்பையும் இந்தக் கூட்டத் தொடரிலேயே அறிவித்து 87,000 குடும்பங்களின் துயர் துடைக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்'' என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x