Published : 31 Mar 2023 01:18 PM
Last Updated : 31 Mar 2023 01:18 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மாநில சுகாதார பேரவையை கடந்த ஆண்டு இதே நாளில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். மாநில சுகாதாரப் பேரவை இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த சுகாதார பேரவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேரவை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா தாக்கம் உயர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் 2 சதவீதம் ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா கட்டுக்குள் தான் உள்ளது. இதனால் சில நடைமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் தான், நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100% கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதனால் பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு பாதிப்பு உள்ளது என்று அர்த்தம் கிடையாது. நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம். முதலில் மருத்துவமனையில் இருந்து முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்த வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT