Published : 31 Mar 2023 01:12 PM
Last Updated : 31 Mar 2023 01:12 PM
கும்பகோணம்: கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் வாக்குறுதியளித்தார். ஆனால் 20 மாதங்களுக்கு மேலாகியும், தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் உள்ளார். இந்த நிலையில் கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே முதல்வர் அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு: கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக சட்டப்பேரவை மாணியக் கோரிக்கையின் போதே அறிவிப்பார் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கும்பகோணம் பகுதி, 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சோழ மன்னர்களின் தலைநகரமாகவும், அதனைத் தொடர்ந்து 1789-ம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முடியும் வரை கும்பகோணம் தலைநகரமாக விளங்கியது.
அதேபோல் இங்கு, கடந்த 1806-ம் ஆண்டு முதல் 1863- ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றமும், தற்போது தஞ்சாவூர் மாவட்ட தலைமை நீதிமன்றம், சிவில் நீதிமன்றங்கள், சிலை திருட்டு தடுப்பு நீதிமன்றம், மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களும் என ஒருங்கிணைந்த நீதிமன்றங்களாகச் செயல்பட்டு வருகிறது.
மேலும், 12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மாசி மகாமகமும், ஆண்டு தோறும் நடைபெறும் மாசிமக விழாவும், இதில் தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்பட 12 சிவன் கோயில்களும், 5 பெருமாள் கோயில்கள் எனக் கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் புராதன, நவக்கிரஹ, பரிகார கோயில்கள் உள்ளன. சோழர் காலத்தில் எச்சங்கள் மிச்சங்களும் உள்ளதால், தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாடு, மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வந்து செல்வார்கள்.
அதே போல் நாகப்பட்டிணத்தை உள்ளடக்கிய கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியும், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோட்டமும் இயங்கி வருகிறது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்டத்திற்கான தலைமை அலுவலகமும், தஞ்சாவூருக்கு முன்பே இங்குத் தொடங்கப்பட்ட வருமான வரித்துறை அலுவலகமும் உள்ளது.
மேலும், மாவட்ட தலைமையகத்திற்குத் தேவையான பெரும்பாலான துறையின் தலைமை அலுவலகமும் இயங்கி வருகிறது. இதேபோல், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியும், நாமக்கல் வரை இன்றளவும் கும்பகோணம் மறைமாவட்ட தலைமையகமும் செயல்பட்டு வருகிறது. அதே போல் தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமையகமும் இயங்கி வருகிறது.
இங்கு, வெற்றிலை. நெய் சீவல், ஐம்பொன் சிலைகள், பித்தளை குத்து விளக்குகள், பாத்திரங்கள், பிரபலமான நகைக்கடைகள் என தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் வருமானமும், ஏற்றுமதி செய்யப்படுவதால், கும்பகோணம் வர்த்தக கேந்திரமாக திகழ்கிறது.
இந்நிலையில், அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் கடந்த 25 ஆண்டுகளாக, தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியதின் பேரில், கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதியளித்தார். ஆனார் 20 மாதங்களுக்கு மேலாகியும், தமிழக முதல்வர் அறிவிக்காமல் உள்ளார்.
இது குறித்து கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், சட்டப்பேரவையிலும், நேரிடையாக பல முறை வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், தமிழக முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் தபால் கார்டு அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு வகையான அமைதி வழி போராட்டங்கள் மூலம் வலியுறுத்தியும் வருகின்றனர்.
எனவே, தமிழக முதல்வர், சட்டப்பேரவையில் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள வருவாய் மானியக்கோரிக்கையின் போது, கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிப்பார் எனக் கும்பகோணம் பகுதியுள்ள பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT