Published : 31 Mar 2023 06:08 AM
Last Updated : 31 Mar 2023 06:08 AM

அம்மா உணவகங்களை மூட முதல்வர் உத்தரவிடவில்லை: எஸ்.பி.வேலுமணிக்கு அமைச்சர் நேரு பதில்

சென்னை: அம்மா உணவகங்கள் மூடப்படவில்லை. மூடுவதற்கு முதல்வரும் உத்தரவிடவில்லை. ரூ.15 கோடிமட்டுமே வருவாய் வந்தாலும் ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது நேற்று நடைபெற்ற விவாதம்: அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி: ஊரக வளர்ச்சித் துறைக்கு கடந்தாண்டை விட ரூ.4,055 கோடி நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், ஊரக உள்ளாட்சி பணிகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். ‘தாய்திட்டம்’உள்ளிட்ட திட்டங்கள் பெயர் மாற்றப்பட்டு புதிய திட்டங்கள் போன்று செயல்படுத்தப்படுகின்றன.

மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கூடுதலாக வங்கிக்கடன் வழங்கவும், இருசக்கர வாகன மானிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இளைஞர்களுக்கும் இருசக்கர வாகன மானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

கடந்த 2013-ம் ஆண்டு அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டது. திமுகஆட்சி அமைந்ததும் அந்த திட்டத்தை முடக்காமல் செயல்படுத்துவோம் என தெரிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இதற்காகதமிழக அரசு சார்பில் ரூ.100 கோடிநிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 3 பட்ஜெட்களிலும் இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

அமைச்சர் கே.என்.நேரு: அம்மா உணவகத்தை நிறுத்தும்எண்ணம் எங்களுக்கு இல்லை.முதல்வர் அப்படி கூறவும் இல்லை.ஒரு அம்மா உணவகத்தில் ரூ.4 ஆயிரம் வருவாய் வருகிறது. ஆனால், அங்கு பணியாற்றுவோருக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை சம்பளம் தரவேண்டியுள்ளது. எனவே, ஒருநாள் விட்டு ஒருநாள்பணி தரும் வகையில் மாற்றியுள்ளோம். எங்கும் மூடப்படவில்லை. ரயில்வே இடத்தில் இருந்ததை மாற்றி மீண்டும் திறந்துள்ளோம். அரசியலுக்காக பேசாதீர்கள்.

எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி: அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொருட்கள் தரமாக வழங்காததால், உணவும் தரமாக வழங்கப்படவில்லை. இதனால் உணவகத்துக்கு வருவோர் எண்ணிக்கை குறைகிறது. தரமான உணவுப்பொருட்களை வழங்க வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: எங்கு தரமான பொருள் வழங்கவில்லை என்பதை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். தவறு நடைபெறுவது இயல்பு. தவறே நடக்கவில்லை என்று கூறவில்லை. எந்த இடம் என்று குறிப்பிட்டு கூறினால் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி: சென்னை மாநகராட்சியில்உள்ள அம்மா உணவகங்களில் பொருட்கள் தரமாக வழங்கப்படவில்லை என்று அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: எந்த இடத்தில் பொருட்கள் தரமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

எஸ்.பி.வேலுமணி: அம்மா உணவகத்துக்கு அதிமுக ஆட்சியில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆட்சியில் 3 ஆண்டுகளாக நிதியே ஒதுக்கவில்லை.

அமைச்சர் நேரு: அம்மா உணவகத்தை சென்னை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ள நிலையில்,மாநகராட்சியில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் இம்முறை இரண்டு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மா உணவகங்களில் இருந்து ஆண்டுக்கு ரூ.15 கோடிதான் வருவாய் வருகிறது. ஆனால், ரூ.129.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x