Published : 31 Mar 2023 06:12 AM
Last Updated : 31 Mar 2023 06:12 AM
சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களில் கடந்தாண்டு நவம்பர் வரை ஓய்வு பெற்ற, உயிரிழந்த 3,414 பேருக்கான பணப்பலனாக ரூ.1,032.12 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வு வளம்பெற இவ்வரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, கடந்த 2022 டிச.1-ம் தேதி, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 2020 மே முதல் 2021 மார்ச் வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள், என 1,241 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் ரூ.242.67 கோடியும், 2-ம் கட்டமாக, கடந்த மார்ச் 27-ம் தேதி 2021ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற மற்றும்உயிரிழந்த பணியாளர்கள் என 1,626 பேருக்கு பணப் பலன்கள் ரூ.308.45 கோடியும் போக்குவரத்து அமைச்சரால் வழங்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடும் நிதி நெருக்கடியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 2022 ஏப்ரல் முதல் 2022 நவம்பர் வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற,விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்டபண பலன்களுக்காக ரூ.1,031.32 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT