Published : 24 Sep 2017 11:07 AM
Last Updated : 24 Sep 2017 11:07 AM
2016-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்காக, தேர்தல் ஆணையம் பல கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில் மதுரை தெற்கு தொகுதிக்கான தேர்தல் செலவு கணக்குகள் மட்டும் ‘101 ஏஏ’ முதல் ’108 ஏஏ’ வரை 8 தலைப்புகளில் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் செலவினங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த செலவினங்கள் சரியாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய நேரில் பார்வையிட, மதுரை மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிர்வாகி கே. ஹக்கீம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுமதி கேட்டிருந்தார். அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
கடந்த 15-ம் தேதி அதிகாரிகள் மேற்பார்வையில் ஹக்கீமை தெற்கு தொகுதியில் ‘106 ஏஏ’ தலைப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர் செய்த கணக்குகளை பார்வையிட்டார். இந்த ஒரே தலைப்பில் மட்டுமே அதிகாரிகள் 2,600 பக்கங்களில் ரூ. 41,03,122-க்கு தேர்தல் செலவு காட்டியிருந்தார். அதில் 334 பக்கங்களை மட்டும் இவர் ரூ. 668 கட்டணம் கட்டி பெற்றுள்ளார்.
இவர் பெற்ற தேர்தல் செலவின பக்கங்களில் பல ரசீதுகளில் குறிப்பிடப்பட்ட கடைகள் அந்த இடங்களில் இல்லை என்பதால், அந்த ரசீதுகள் போலியாக தயாரிக்கப்பட்டதா? என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹக்கீம் கூறியதாவது: மதுரை தெற்கு தொகுதியில் தேர்தலுக்காக அதிகாரிகள் 2017 மே 9-ம் தேதி செலவு கணக்கை தொடங்கினர். இதில் நான் பார்வையிட்ட ‘106 ஏஏ’ செலவினம் காட்டிய பகுதியில் மட்டும் 56 இடங்களில் 213 பூத்துகள் அமைத்துள்ளனர். இங்கு 2,418 ஊழியர்கள், பகுதி ஊழியர்களை சேர்த்து 7,550 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஊதியமாக மட்டும் ரூ.25,86,665 வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த தேர்தல் செலவினத்தில் 63 சதவீதம். தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு வாகனங்களுக்கு ரூ.1,62,438-க்கு எரிபொருள் நிரப்பியுள்ளனர். மேலும், ரூ.4,38,179-க்கு வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். மொத்தம் ரூ.6,69,137-க்கு வாகனங்களுக்காக மட்டும் செலவிட்டுள்ளனர். இந்த வாகன செலவினத்தை கொண்டு கணக்கிட்டால் அதிகாரிகள் சுமார் 66,913 கி.மீ., தூரம் பயணித்திருக்க வேண்டும். ஆனால், மதுரை தெற்கு தொகுதி என்பது தமிழகத்தில் மிகச் சிறிய தொகுதிகளில் ஒன்று. அதன் மொத்த சுற்றளவே 14 கி.மீ. மட்டுமே. அப்படி பார்த்தால் மொத்த வாகனங்களில் 4,779 முறைகள் தொகுதி சுற்றி வந்துள்ளனர். அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது தெரியவில்லை.
உணவு, டீ மற்றும் பயிற்சி வகுப்புக்கு எல்இடி டிவி வாடகைக்கு எடுப்பது உள்ளிட்ட செலவினங்களுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளனர். எல்இடி டிவி வாடகைக்கு எடுக்க ரூ.93 ஆயிரம் பில் போட்டுள்ளனர். பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க மாதிரி வாக்கு சாவடி அமைக்க ரூ.24 ஆயிரம் செலவு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்களித்து வர வீல் சேர் தள்ளிய ஊழியர்களுக்கு ரூ. 22,500 ஊதியம் வழங்கியுள்ளனர். வாக்குச்சாவடியில் தண்ணீர் வாங்கிய வகையிலும், பள்ளியில் ஏற்கெனவே நாற்காலிகள், மேஜைகள் இருக்கும் நிலையில் நாற்காலி, பல்பு வாங்கிய வகையிலும் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்துள்ளனர். தேர்தலை விளம்பரப்படுத்த ரூ.2 லட்சத்துக்கு ப்ளக்ஸ் அடித்து வைத்துள்ளனர். தேர்தலில் பேஜ் அடிப்பது, நோட்டீஸ் அடிப்பது போன்ற பிரிண்டிங் வேலைகள் செய்ய ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்துள்ளனர். இப்படி செலவு செய்ததாக கணக்கு காட்டப்பட்ட பல ரசீதுகள் முறையாக இல்லாமல் கைகளால் எழுதப்பட்டு உள்ளது. அனைத்து ரசீதுகளிலும் செலவினங்களை சரி பார்த்து தேர்தல் நடத்தும் அலுவலர் கையெழுத்து போட்டுள்ளனர். இதில் காட்டப்பட்ட பல ரசீதுகளில் குறிப்பிடப்பட்ட கடைகள் சம்பந்தப்பட்ட முகவரியிலேயே இல்லை. அந்த ரசீதில் குறிப்பிட்ட போனில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டால் ராங் கால் என தகவல் தருகின்றனர். போஸ்ட் கார்டு, ஸ்டாம்புகளை பல்பொருள் அங்காடியில் வாங்கியுள்ளனர். அந்த கடை பில்லில் குறிப்பிட்ட இடத்தில் இல்லை. இதுபோன்ற நெருடலான பல ரசீதுகள், கணக்குகள் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளின் செலவு கணக்குகளை ஆய்வு செய்தால் பல தேவையில்லா செலவினங்கள், முறையில்லா ரசீதுகள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்புள்ளது. இவற்றை தேர்தல் ஆணையம், நேரடியாக சரி பார்த்து முறைகேடுகள் நடந்துள்ளதா என விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மதுரையில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் கணக்குளை தவறாக காட்ட முடியாது. அதிகாரிகள் மூன்று கட்டமாக தணிக்கை செய்வார்கள். இன்னும் தணிக்கை முழுமையாக முடியவில்லை. தேர்தலில் சில தவிர்க்க முடியாத அன்றாட நடவடிக்கைக்கு செலவுக்கு நிதி ஒதுக்க மாட்டார்கள். அதையும் அதிகாரிகள் சமாளித்துதான் ஆக வேண்டும். தேர்தலுக்கு ஒதுக்கும் நிதியை விட அதிக செலவுதான் ஆகியிருக்கிறது. அதில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT