Published : 23 Sep 2017 10:33 AM
Last Updated : 23 Sep 2017 10:33 AM
தீபாவளி பண்டிகையையொட்டி குழந்தைகளைக் கவரும் வகையில் சிவகாசியில் இந்த ஆண்டு புது வகை பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தசரா, தீபாவளி பண்டிகைகளையொட்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பட்டாசுத் தொழில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததால் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், பட்டாசு ஆலைகள் அடைப்பு உட்பட பல்வேறு காரணங்களால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப் பட்டது.அதைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஜிஎஸ்டியில் கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் பட்டாசு விற்பனை பாதிக்கப்படும் என்ற ஐயமும் பட்டாசு உற்பத்தியாளர்களிடையே எழுந்தது. இதனால் பல பட்டாசு ஆலைகளில் உற்பத்தி குறைக்கப்பட்டது.
இந் நிலையில், தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளையொட்டி சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பட்டாசு ஆலைகளில் இறுதிகட்ட பட்டாசு உற்பத்தி விறுவிறுப்படைந்துள்ளது.
சிவகாசியில் ஆண்டுதோறும் வாடிக்கையாளர்கள், பட்டாசுப் பிரியர்களைக் கவரும் வகையில் புதுப்புது பட்டாசு ரகங்கள் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சந்தைக்கு ஏராளமான புது ரகங்கள் வரவில்லை. இருப்பினும் சில பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்பட்ட புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
குறிப்பாக இவை குழந்தைகள், சிறுவர்களைக் கவரும் வகையிலான பட்டாசு மற்றும் மத்தாப்பு ரகங்களாகவே உள்ளன. ஏற்கெனவே உள்ள பட்டாசு ரகங்களில் சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு பென்டென், சோட்டா பீம், பிளாக் தண்டர், மிக்கிமவுஸ், பக்ஸ்பண்ணி ஆகிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட பட்டாசு மற்றும் மத்தாப்பு வகைகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளன.
இது குறித்து சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு விற்பனையாளர் கார்த்திகேயன் கூறியதாவது:
பட்டாசுகளை வெடிப்பதில் பெரியவர்களைவிட சிறுவர்களே அதிக ஆர்வம் காட்டுவர். அதற்காக சிறுவர்களைக் கவரும் வகையிலான பட்டாசு மற்றும் மத்தாப்பு ரகங்களே அதிகம் விற்பனையாகும்.
அந்த வகையில், வழக்கமான பட்டாசு ரகங்களில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த ஆண்டு புதிய ரக மத்தாப்பு மற்றும் பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதுபோன்ற மத்தாப்பு மற்றும் பட்டாசு ரகங்களுக்கு சிறுவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT