Published : 31 Mar 2023 04:58 AM
Last Updated : 31 Mar 2023 04:58 AM
சென்னை: தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. எனவே, கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு’ குறித்த கருத்தரங்கை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:
உலகம் முழுவதும் ஒமைக்ரான் உருமாற்ற வைரஸின் தாக்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் கடந்த மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சுமார் 2 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்தபோது, சராசரியாக 2-3 நாட்களுக்கு ஒருமுறை ஒருவருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. தற்போது, தினமும் 8-10 பேருக்கு தொற்று கண்டறியப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியத்தை நெருங்கி வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. ஆனால், ஒரே பகுதியில் பலரையும் பாதிக்கிற ‘கிளஸ்டர்’ வகை பரவல் இல்லை என்பது ஆறுதல். இது மிதமான பாதிப்பை ஏற்படுத்தும் தொற்றாக இருப்பதால், மக்கள் அச்சப்பட வேண்டாம். ஆனாலும், கரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை பள்ளிக்கரணையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘வாரத்துக்கு ஒரு மாத்திரை உட்கொள்ள வேண்டிய நிலையில் ஒரே நாளில் 60, 70 என்று உட்கொண்டதால், உயிரிழப்பு ஏற்பட்டதை சமீபத்தில் பார்த்தோம். அதே போல, உடல் கட்டமைப்பை காட்ட வேண்டும் என தவறான மருந்து எடுத்துக் கொள்வது, அளவுக்கு அதிகமாக பயிற்சி செய்வதும் விபரீதமான முடிவுகளை ஏற்படுத்தும். எனவே, மருந்து, மாத்திரையோ, உடற்பயிற்சியோ எதுவாக இருந்தாலும், பரிந்துரையின்பேரில் அளவோடு இருப்பது அவசியம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT