Published : 30 Mar 2023 09:00 PM
Last Updated : 30 Mar 2023 09:00 PM
சென்னை: "தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்புக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் கஞ்சா எங்கும் பயிரிடப்படாத நிலை இருந்துக் கொண்டிருக்கிறது" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவைக்கு வெளியே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகரிப்பு தொடர்பான இபிஎஸ் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கஞ்சாவும் போதை வஸ்துக்களான குட்கா, பான்பராக் போன்ற போதை வஸ்துக்களும் கூடுதலாக இருந்தது, கட்டுக்கடங்காமல் இருந்ததும் யார் ஆட்சிக் காலத்தில் இருந்தது என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்திருந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பிற்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் கஞ்சா எங்கும் பயிரிடப்படாத நிலை இருந்துக் கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் சொல்லும் போதும், பத்திரிகையாளர்கள் மத்தியில் சொல்லும்போதும் கஞ்சா விற்பனை தாரளமாக கிடைக்கிறது என்கின்றார். அவரிடத்தில் நாங்கள் வைக்கின்ற கோரிக்கை கஞ்சா விற்பனை என்பது எங்கே இருக்கிறது என்ற தகவலை சொன்னால் அந்த கஞ்சாவை காவல்துறையினர் மூலம் அழித்தொழிப்பதற்கும் சம்பந்தபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கும் சரியாக இருக்கும்.
சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் கஞ்சா தமிழ்நாட்டில் உள்ளது என்றெல்லாம் சொல்லுவது, அவர் செய்யும் அரசியலுக்கு அழகல்ல. அதிமுக ஆட்சியில், இந்த போதை வஸ்துக்கள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழக முதல்வர் அன்று எதிர்கட்சித் தலைவராக இருந்த போது சென்னையில் அனைத்து கடைகளிலும் இந்த குட்கா, பான்பராக் போன்ற பொருட்கள் மிக தாராளமாக கிடைக்கிறது என்று கூறி 21 சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த போதை பொருட்களை கொண்டு வந்து சட்டமன்றத்திலேயே காட்டினோம்.
அப்போது உண்மையிலேயே அக்கரை இருந்திருந்தால் சட்டப்பேரவை தலைவரிடத்தில் சொல்லி எதிர்கட்சித் தலைவர் சென்னையில் எந்தெந்த கடைகளில் போதை பொருட்களை வாங்கினார் என்ற விவரங்களை கேட்டுப்பெற்று, சம்பந்தபட்ட கடைகளில் விற்காமல் இருக்க நடவடிக்கை எடுத்திருந்தால் உண்மையான அக்கறை உள்ளவராக இருந்திருப்பார். ஆனால் இந்த தவறை சுட்டிக்காட்டிய அன்றைய திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே அப்போது பார்த்தார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலும் கூட கஞ்சா பயிர் வளர்க்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT