Published : 30 Mar 2023 05:45 PM
Last Updated : 30 Mar 2023 05:45 PM
புதுச்சேரி: “பேச்சுரிமை, எழுத்துரிமையை தடுக்கும் முதல் ஆட்சி, புதுவை முதல்வர் ரங்கசாமி ஆட்சிதான்” என்று வைத்திலிங்கம் எம்.பி ஆவேசத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் கிருமாம்பாக்கம் பகுதியில் கடலூர் - புதுச்சேரி சாலையில் இன்று நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எம்.பி வைத்திலிங்கம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ''பிரதமரிடம் நீங்கள் எத்தனை முறை வெளிநாடு சென்றிருக்கிறீர்கள். உங்களோடு அதானி எத்தனை முறை வந்திருக்கிறார். இரண்டு பேரும் சென்று வந்தபிறகு அதானிக்கு கிடைத்த ஒப்பந்தங்கள் எவை என்ற கேள்விகளை ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாக நாடாளுமன்றத்தில் நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். அதன்பிறகு பார்த்தால் அதானியின் விவகாரம் இன்று உலக நாடுகள் மத்தியில் பெரிய கேள்விக்குறியை உருவாக்கியிருக்கிறது. அதற்கு பிரதமர் நரேந்திர மோடி விசாரணை வைக்க வேண்டும் என்று கூறினால், அதற்கு தயாராக இல்லாம் காலம் கடத்துகிறார்.
19 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துகிறோம். அதில் மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், அகிலேஷ்யாதவ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் முக்கிய கட்சிகள் இருக்கின்றன. ஆனால், இதற்கு எந்தவிதமான விடையும் அளிக்காமல் காலம் தாழ்த்த வேண்டும், மறைக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தை ஆளுங்கட்சியினரே முடக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அது தொடர்பாக ராகுல் காந்தி கேட்ட ஒரு கேள்விக்காக எம்பி பதவியில் இருந்து பதவி இழப்பு செய்திருக்கின்றனர். இப்படிப்பட்ட கொடுமையான சூழ்நிலை நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இருக்கின்றது. ஏனென்றால் சிறிய போஸ்டர் ஒட்டினால்கூட வருகின்ற காலத்தில் வழக்குகள் போடக்கூடிய நிலை இன்று வந்திருக்கிறது.
டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதற்காக வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. அதுபோல் புதுச்சேரியிலும் வந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இதனை தடுக்க வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்க வேண்டும். பாஜகவை தூர அனுப்ப வேண்டும் என்பது நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். நம்முடைய பணத்தையெல்லாம் கொள்ளையடித்த அதானி மீது விசாரணை செய்து வழக்கு தொடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்பது எதிர்கட்சிகளின் கோரிக்கை.
புதுச்சேரியில் மதுபானத்தை எதிர்த்து பேனர் வைத்தோம். அதனைக் கூட இந்த அரசு உடனடியாக அகற்றியது. அதே இடத்தில் பிறந்தநாள் பேனர் மறுநாளே வைக்கின்றனர். பேச்சுரிமை, எழுத்துரிமையை தடுக்கும் முதல் ஆட்சி ரங்கசாமி ஆட்சிதான். காமராஜர் ஆட்சி என்று அவர் சொல்கிறார். காமராஜர் தமிழத்தில் முழுமையான மதுவிலக்கு கொள்கையை கொண்டு வந்தார். ஆனால், புதுச்சேரியில் இருக்கும் காமராஜர் முழுமையான வியாபாரத்தை செய்து கொண்டிருக்கின்றார். இது வேதனை தருக்கிறது. ஏனென்றால் இது உண்மையான காமராஜர் ஆட்சியா, உண்மையான காமராஜர் தொண்டனா என்பது கேள்வியாக இருக்கிறது. இனிமேல் இவர்கள் காமராஜரின் பெயரை பயன்படுத்த வேண்டாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT