Published : 30 Mar 2023 04:38 PM
Last Updated : 30 Mar 2023 04:38 PM
கோவை: சென்னை - கோவை இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சேவையை வரும் ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்க உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா கூறியுள்ளார்.
சென்னை - கோவை இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சோதனை ஓட்டம் இன்று (மார்ச் 30) நடைபெற்றது. அதன்படி, சென்னையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்ட ரயில், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்கள் வழியாக காலை 11.18 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. பின்னர், கோவையில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு இந்த ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது.
இந்த ரயிலில் சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள், ரயிலை இயக்க உள்ள ரயில்வே பணியாளர்கள் உள்ளிட்டோர் பயணித்தனர். இந்த சோதனை ஓட்டம் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா கோவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சென்னையிலிருந்து கோவை வரும் 'வந்தே பாரத்' ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் போது எவ்வளவு மணி நேரத்தில் ரயிலை இயக்க முடியும் என சோதிக்கப்பட்டது.
சென்னையிலிருந்து 5 மணி நேரம் 38 நிமிடங்களில் இந்த ரயில் கோவை வந்து சேர்ந்தது. ரயில்வே அட்டவணையில் இந்த ரயில் கோவை வந்து சேர 6 மணி நேர இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் பராமரிப்புப் பணிகள் கோவையில் உள்ள பணிமனையில் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் 'வந்தே பாரத்' ரயில் இதுவாகும். தென்னிந்தியாவின் இரண்டாவது 'வந்தே பாரத்' ரயில் இது. முதல் ரயில் சென்னை - மைசூரு இடையே இயக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும். அவற்றில் மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும். கோவை - பெங்களூரு இடையே இதேபோன்று வந்தே பாரத் ரயிலை இயக்கலாமா என்பது குறித்து பின்னர் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என பங்கஜ் குமார் சின்ஹா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT