Published : 30 Mar 2023 05:49 AM
Last Updated : 30 Mar 2023 05:49 AM

22 மாவட்டங்களில் ரூ.100 கோடியில் 123 கண்மாய்கள் புனரமைக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனதிட்டத்தின்கீழ் காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 22 மாவட்டங்களில் ரூ.100 கோடி செலவில் 123 கண்மாய்கள் புதுப்பிக்கப்பட்டு புனரமைப்பு செய்யப்படும் என சட்டப்பேரவையில் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதற்கு அத்துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசினார்.

அப்போது அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:

# சென்னை மாநகராட்சி மற்றும்அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்ட பகுதிகளில், வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்படு்ம் வெள்ள பாதிப்புகளைக் குறைக்க நீர்வழித் தடங்களில் ரூ.20 கோடியில் பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

# சென்னை மற்றும் காஞ்சிபுரம்மாவட்டங்களில் அடையாறு உப வடிநிலத்தில் போரூர், கெருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளப்பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்க ரூ.88 கோடியில் வெள்ள தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

# சென்னை மாநகராட்சி குடிநீர்தேவைக்காக சென்னை மாவட் டத்தில் கொசஸ்தலையாறு உப வடிநிலத்துக்கு உட்பட்ட மாதவரம் ரெட்டேரியை குடிநீர் ஆதாரமாக மாற்ற ரூ.44 கோடி செலவிடப்படும்.

# சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் நீண்டகால அடிப்படையிலான 2 வெள்ள தணிப்புப் பணிகள் ரூ.106 கோடியில் மேற்கொள்ளப்படும். இதேபோல், கடலூர், திருச்சி, மயிலாடுதுறை, விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் ரூ.58 கோடியே45 லட்சம் செலவில் வெள்ளதணிப்புப் பணி செய்யப்படும்.

# கோவை, திண்டுக்கல், திருச்சி உட்பட 8 மாவட்டங்களில் 15 இடங்களில் ரூ.70 கோடியே 75 லட்சம் செலவில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும்.

# பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 22 மாவட்டங்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 123 கண்மாய்கள் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்படும்.

# கோவை, வேலூர் மாவட்டங்களில் சிறிய ஆறுகள் மற்றும் ஓடைகள் குறுக்கே ரூ.49 கோடிசெலவில் பாலங்கள், தரைப்பாலங்கள், கரையோர சாலை, நடைபாதை அமைக்கப்படும்.

# திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கடலூர் உட்பட 6 மாவட்டங்களில் ரூ.129 கோடியில்பாசன அமைப்புகளில் கட்டுமானம், மறுகட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும். மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

‘கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என என் சமாதியில் எழுதுங்கள்...

சட்டப்பேரவையில் நீர்வளத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசும்போது, ‘‘திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் எனக்கு பொதுப்பணி்த்துறை அமைச்சர் பொறுப்பு கொடுப்பார்கள்.

அந்த வகையில் இந்த முறை திமுக ஆட்சி வந்தபோது எனது விருப்பப்படியே நீர்வளத் துறை தரப்பட்டது. இ்த்துறை மூலம் விவசாயிகளுக்கு பல நன்மைகள் செய்ய முடியும் என்பதுதான் எனது விருப்பத்துக்கு காரணம்.

கருணாநிதியின் மகனிடம் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) மட்டுமல்ல அவரது மகனான அமைச்சர் உதயநிதியின் மகனிடமும் நான் விசுவாசமாக பணியாற்றுவேன். நான் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வேன்.

என்றாலும், ஒருநாள் மறைவேன். அப்போது எனது புதைகுழியில் ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என்று எழுதிவையுங்கள்’’ என உருக்கமாகப் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x