Published : 30 Mar 2023 05:45 AM
Last Updated : 30 Mar 2023 05:45 AM
சென்னை: முந்தைய அரசு கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போடவில்லை என்று ஆர்.பி.உதயகுமாருக்கு நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். சட்டப்பேரவையில், நீர்வளம் மற்றும் தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்நேற்று தொடங்கியது.
விவாதத்தை, அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்துப் பேசியதாவது: நீர்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த தகவல்கள் இல்லை.
நிலத்தடி நீர் தற்போது மிகவும் சரிந்துவிட்டது. அதற்கான திட்டங்கள் இல்லை. ஆயிரம் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தடுப்பணைகள் கட்டப்பட்டது குறித்த தகவல்கள் இல்லை.
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட குடிமராமத்து திட்டம் மூலம் கடந்த 2016-17 முதல், 2019-20வரை 30 மாவட்டங்களில் ரூ.9,119.20 கோடியில் 4,824 பணிகள்மேற்கொள்ளப்பட்டன. 2020-21-ல்34 மாவட்டங்களில், ரூ.498 கோடியில் 387 பணிகள் தொடங்கப்பட்டன. நல்ல வரவேற்பு பெற்ற இத்திட்டம், இந்த ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கப்பட்டது. இத்திட்டம் தற்போதும் தொடர்ந்தாலும், வருவாய்த் துறையினர், சுரங்கத் துறையினர் எடுக்க அனுமதிப்பதில்லை. நதிநீர் இணைப்பு திட்டத்தைப் பொறுத்தவரை காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அத்திட்டம் எப்போது நிறைவேறும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்,நடந்தாய் வாழி காவிரி திட்டம், சரபங்கா நீரேற்று திட்டம் எப்போது நிறைவேற்றப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றன. அவை செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக உறுப்பினர் ராஜமுத்துவும், நடந்தாய் வாழி காவிரி திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தன் பதிலுரையில் பேசியதாவது: ஆட்சி மாறும்போது முந்தைய அரசால் தொடங்கப்பட்ட திட்டங்களை புதிதாக அமைகிற அரசு செய்து முடிக்க வேண்டும். இதுதான் நல்ல அணுகுமுறை.
ஆனால், திமுக அரசால் தொடங்கப்பட்ட பல திட்டங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டது. இதற்கு பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும். ஆனால், முந்தையஅரசு கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போடுவதில்லை.
அதிமுக அரசு கொண்டுவந்த நடந்தாய் வாழி காவேரி திட்டம் அருமையான திட்டம். அதிமுக ஆட்சிக்காலத்தில் அத்திட்டத்தை ரூ.11,700 கோடியில் செயல்படுத்த கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தத்திட்டத்தை கிடப்பில் போடவில்லை. முதல்கட்டமாக ரூ.3,900கோடியில் பணிகளை மேற்கொள்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
கோதையாறு பாசன புனரமைப்புத் திட்டத்தை ரூ.2,059 கோடியில் செயல்படுத்துவதற்கான விரிவான ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 3 ஆண்டுகளில் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
தமிழக முதல்வருக்கும், கேரள முதல்வருக்கம் நல்ல நட்புணர்வு இருந்து வருவதால் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், நெய்யாறு திட்டம், கோதையாறு திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் நல்ல முறையில் செயல்படுத்துவோம். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT