Published : 30 Mar 2023 12:01 AM
Last Updated : 30 Mar 2023 12:01 AM
மதுரை: மாநகராட்சி சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை ஆன்லைன் முறையில் செலுத்த முடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். வரி வசூலை எளிமைப்படுத்த ஆன்லைன் பணவரித்தனைக்கு மாநகராட்சி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். வார்டுகள் 5 மண்டலங்களாக பிரித்து மண்டலம் வாரியாக சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வரிகள் வசூல் செய்யப்படுகிறது. இதில், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடு மற்றும் சொத்துகளுக்கு செலுத்தும் சொத்து வரி வசூல் மூலம் மட்டுமே ஆண்டிற்கு ரூ.200 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிகரமாக உள்ளது. மாநகராட்சி சொத்து வரியை ஆன்லைன்
(https://tnurbanepay.tn.gov.in/) மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தும் வசதிகள் உள்ளன. நேரடியாக செலுத்துவதற்கு வார்டுகளில் வரி செலுத்தும் மையங்கள் உள்ளன. ‘கரோனா’ பெருந்தொற்று காலத்தில் தமிழக அரசு, ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதையே ஊக்குவித்தது. மக்களும் ஆர்வமாக ஆன்லைன் மூலமே சொத்து வரி செலுத்தினர்.
மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் சொத்து வரி செலுத்த நகராட்சி நிர்வாக இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்து வரி செலுத்தியவர்களாக இருப்பின் தங்கள் மொபைல் எண் அல்லது இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு லாக் இன் செய்ய வேண்டும். அவ்வாறு அல்லாமல் முதல் முறையாக ஆன்லைன் கட்டணம் செலுத்துவோர்களாக இருப்பின், முதலில் தங்கள் விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். இதற்கு பதிலாக, மேற்கண்டவாறு பதிவு செய்யாமல் ஆன்லைனில் சொத்து வரி செலுத்த சொத்து வரி வலைதளத்தின் https://tnurbanepay.tn.gov.in/IntegratedPaymentNew1.aspx இணைப்பில் உள்ள ‘Quick Pay’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து வரியை செலுத்தலாம்.
இந்நிலையில், சமீப காலமாக மக்கள், ஆன்லைன் முறையில் சொத்து வரி உள்ளிட்ட இதர வரிகளை செலுத்த முடியவில்லை. இணையத்தில் முதல் முறையாக ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த முயன்றால் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களையே பதிவு செய்ய முடியில்லை. பிறந்த ஆண்டை குறிப்பிடுவதற்காக ஆண்டுகளை சர்ச் செய்யும்போது சிக்கல் உள்ளதாக தகவல். ஆன்லைன் சர்வர் பழுது, ‘லிங்’ ஓப்பன் ஆவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளால் மக்கள், மாநகராட்சி வரிவசூல் மையங்களுக்கு நேரடியாக சென்று வரி செலுத்தும் நிலையே உள்ளது. வரிவசூல் மையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று செலுத்த முடியவில்லை. மேலும், வரிவசூல் மையங்களில் உள்ள சர்வரும் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் வரிசையில் சில சமயங்களில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பல நூறு கோடி வரி நிலுவை இருப்பதாகவும், வரியை தாமதம் செய்யாமல் செலுத்தவும் மாநகராட்சி வேண்டுகோள் விடுகிறது. வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு ‘சீல்’, குடிநீர், பாதாளசாக்கடை இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனால், சொத்து வரி உள்ளிட்ட வரிகளை எளிமையாகவும், எளிதாகவும் ஆன்லைன் முறையில் செலுத்துவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது மின்கட்டணம் முதல் அனைத்து வகை கட்டணங்களையும் மக்கள் கூகுள் பே, பேடிஎம், ஃபோன்பே உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மூலம் எளிதாகவும், விரைவாகவும் பணம் செலுத்த பழகிவிட்டனர்.
ஆனால், மாநகராட்சி சொத்து வரியை மக்களால் இன்றைய நவீன கணிணி யுகத்திலும் கூகுள் பே, ஃபோன் பே போன்ற ஆன்லைன் முறையில் எளிதாக செலுத்த முடியவில்லை. வரி செலுத்துவதற்கான இணையதளமும் ஒத்துழைப்பதில்லை. உலகமே இன்று உள்ளங்கைக்கு வந்த நிலையில் மாநகராட்சி வரிவசூல் மையங்களில் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு பணம் செலுத்தும் வசதி இல்லை. பணத்தை நேரடியாக கொண்டு சென்றே வரி செலுத்தும் நிலையே உள்ளது. வரி செலுத்துவதற்கான பணத்தை திரட்டுவதற்கு மக்கள் கஷ்டப்படலாம். ஆனால், மக்கள் இன்று பணம் வைத்திருந்தும் வரி செலுத்துவதற்கு மிகுந்த சிரமப்படுகிறார்கள். மாநகராட்சியும், அதன் இணையதளமும் மக்களை பாடாய்படுத்துகிறது.
வரிவசூல் மையங்களில் முறையிட்டால் ஆன்லைன் முறையில் கட்டாதீர்கள், அந்த பணம் மாநகராட்சி கணக்கில் வரவு வருவதில் பல்வேறு சிக்கல் உள்ளதாகவும். நேரடியாக வந்து கட்ட சொல்லியும் பயமுறுத்துகிறார்கள். அதனால், மக்கள், தற்போது நேரடியாக வரிவசூல் மையங்களில் வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், ‘‘தமிழகம் முழுவதுமே பகல் நேரத்தில் அனைவரும் இந்த இணையத்தை பயன்படுத்துவதால் சர்வர் சில நேரங்களில் ஓப்பன் ஆவதில் சிரமம் ஏற்படுகிறது. விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT